தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: வருத்தம் தெரிவித்தார் எஸ்.வி.சேகர்

தேசியக்கொடியை அவமதித்து தொடர்பான முன்ஜாமீன் கோரிய வழக்கில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.
எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்
Updated on
1 min read

தேசியக்கொடியை அவமதித்து தொடர்பான முன்ஜாமீன் கோரிய வழக்கில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் சிலைகள் அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இணையதள பதிவு ஒன்றில், நடிகர் எஸ்.வி.சேகர், தேசியக்கொடி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக  நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர்  தேசியக்கொடியை அவமதித்து, தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசிய எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீஸில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்படி, தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது  மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நடிகர் எஸ்.வி.சேகர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரி மனுத் தாக்கல் செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா காணொலிக்காட்சி மூலம் விசாரித்தார். அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசியக்கொடியை அவமதித்த தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com