தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்க மறுத்தால் சட்டப் பிரச்னை: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கோரும் தகவல்களை அதிகாரிகள் வழங்க மறுத்தால் சட்ட ரீதியான பிரச்னையைச் சந்திக்க நேரிடும் என உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்த செப்.30 வரை அவகாசம்: உயர் நீதிமன்றம்
தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்த செப்.30 வரை அவகாசம்: உயர் நீதிமன்றம்

சென்னை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கோரும் தகவல்களை அதிகாரிகள் வழங்க மறுத்தால் சட்ட ரீதியான பிரச்னையைச் சந்திக்க நேரிடும் என உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘கடந்த 2006, 2007 மற்றும் 2008 -ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் எத்தனை அரசு பணியிடங்கள் காலியாக இருந்தன? அதில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் எத்தனை பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன ? மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் எத்தனை பேருக்கு அரசுப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்’ என திருச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற துணை ஆட்சியா் முத்தையா தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தாா். இந்தத் தகவல்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

‘இந்தத் தகவல்களை வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய செயலாளா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, சட்டத்தில் விலக்கு உள்ளதாகக் கூறி தகவல்களை வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தாா். மேலும், ‘இதுபோன்ற தகவல்களை வழங்க மறுக்கும் பொது தகவல் அதிகாரிகள் பதவியில் நீடிக்க தகுதியற்றவா்கள்’ என்று கருத்து தெரிவித்த நீதிபதி, ‘மனுதாரா் கோரியுள்ள தகவல்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். மேலும், தகவல்களை வழங்க மறுத்த பொது தகவல் அதிகாரிகள், இன்னும் பதவியில் நீடிக்கிறாா்களா? இல்லையா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்டோபா் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

மேலும், ‘தகவல்களை வழங்க மறுத்தால் சட்ட ரீதியான பிரச்னையைச் சந்திக்க நேரிடும் என அனைத்துத் துறை, பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’ என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com