வாழப்பாடியில் 50 ஆண்டுகள் பழமையான வானொலி மைய கட்டடம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 50 ஆண்டுகள் பழமையான வானொலி நிலைய கட்டடம் இன்றளவும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது.
வாழப்பாடி பேரூராட்சி கிழக்குகாடு பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வானொலி ஒலிபரப்பு மைய கட்டடம்.
வாழப்பாடி பேரூராட்சி கிழக்குகாடு பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வானொலி ஒலிபரப்பு மைய கட்டடம்.
Updated on
2 min read

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 50 ஆண்டுகள் பழமையான வானொலி நிலைய கட்டடம் இன்றளவும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது.

இக்கட்டடத்தைப் புதுப்பித்து, தகவல் ஒலிபரப்பில் வானொலியின் முக்கியத்துவத்தை தற்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கும் நினைவுச் சின்னமாக மாற்றிட வேண்டுமென, வரலாற்று ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.  

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1927ல் வானொலி தகவல் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. 1947ல் நாடு சுதந்திரம் அடையும்போது நாட்டில் 6 வானொலி நிலையங்கள் மட்டுமே இருந்தன. மொத்த நிலப்பரப்பில் 2.5 சதவீதமும், 11 சதவீத மக்களை மட்டுமே வானொலி ஒலிபரப்பு சென்றடைந்தது. விடுதலைக்குப் பிறகு, அனைத்து தரப்பு மக்களும் நாட்டு நடப்பு, அரசியல், சமூகம் சார்ந்த அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும், கல்வி மற்றும் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வழிவகை செய்யும் வகையில், அனைத்து பகுதிகளுக்கும் வானொலி தகவல் ஒலிபரப்பு சேவை விரிவுபடுத்தப்பட்டது. குடியிருப்பு பகுதிகள் தோறும் வானொலிப் பெட்டிகள் வைத்து வானொலி ஒலிபரப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

கிராமப்புற மக்கள், அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும், ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்காகவும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசித்தனர். வானொலி ஒலிபரப்பு கிராமப்புற மக்களிடையே அரசியல், சமூகம், கல்வி மருத்துவம் குறித்து பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. படிப்படியாக ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றம் மற்றும் விதவிதமான தகவல் ஒளிபரப்பு கருவிகள் வருகையால் வானொலி ஒலிபரப்பின் முக்கியத்துவம் குறைந்து போனது. ஒலி, ஒளி காட்சிகளை தரும் தொலைக்காட்சி பெட்டிகள் வானொலியின் இடத்தை பிடித்தன. தற்காலத்தில், இணையதளங்கள், சமூக ஊடகங்கள், செல்லிடப்பேசிகளென அதிநவீன சாதனங்களின் பயன்பாடு அனைத்து தரப்பு மக்களிடையேயும் வயது வித்தியாசமின்றி ஒன்றிப்போனது.

வானொலி நிலைய கட்டடத்தில் பொறித்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு.
வானொலி நிலைய கட்டடத்தில் பொறித்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு.

உலகின் எந்த மூலையிலும் நடைபெறும் சம்பவங்களையும், அரிய தகவல்களையும் அடுத்தடுத்த வினாடிகளிலேயே இருந்த இடத்திலிருந்தே கண்கூடாகக் காண்பதற்கேற்ற வசதிகள் அனைவரது சட்டைப்பைக்குள் வந்து விட்டது. இதனால், 40 ஆண்டுகளுக்கு முன் வரை, அனைத்து தரப்பு பொதுமக்களும் தகவல் பெறவும், பொழுது போக்குவதற்கும் ஒரே தகவல் ஒலிபரப்பு சாதனமாக விளங்கிய வானொலி பெட்டிகளின் பயன்பாடு தற்போது அடியோடு குறைந்துபோனது. தகவல் ஒலிபரப்பில் வானொலி ஆற்றிய பங்கு குறித்து, தற்கால சந்ததியினர் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், வாழப்பாடி பேரூராட்சின் அப்போதைய வார்டு உறுப்பினராக இருந்த, மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் ஆ.குமரவேலன் என்பவரது முயற்சியால், 1969ம் ஆண்டு நவம்பர் 18 ந்தேதி,  வானொலி நிலையம் அமைக்கப்பட்டது. அப்போதைய பேரூராட்சி மன்ற தலைவர் பெரியசாமி கவுண்டர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்போதைய தமிழக தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி. நடராஜன் இந்த வானொலி ஒலிபரப்பு நிலையத்தை திறந்து வைத்துள்ளார். 50 ஆண்டுகள் கடந்து, இந்த வானொலி நிலைய கட்டடம் வானொலி ஒலிபரப்பின் வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இன்றளவும் கம்பீரமாய் காணப்படுகிறது.

தற்கால சந்ததியருக்கு தகவல் ஒலிபரப்பில் வானொலியின் முக்கியத்துவத்தை, எடுத்துரைக்கும் விதத்தில், இந்த வானொலி நிலைய கட்டடத்தை புதுப்பித்து நினைவுச் சின்னமாக மாற்றியமைக்கவும், இப்பகுதியிலுள்ள அரசு நிலத்தில் சிறுவர் பூங்கா அமைத்து தொர்ந்து பராமரிக்கவும் மாவட்ட நிர்வாகமும், வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.  

இதுகுறித்து வாழப்பாடியில் வானொலி ஒலிபரப்பு நிலையம் அமைத்த ஆ.குமரவேலன் மகன் கு. கலைஞர் புகழ் கூறியதாவது:

50 ஆண்டுகளுக்கு முன் பத்திரிக்கையாளராக இருந்த எனது தந்தை ஆ.குமரவேலன் , பேரூராட்சி மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார். வாழப்பாடி பகுதி மக்களுக்கு, நாட்டு நடப்பு மற்றும் கல்வி, மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அப்போதைய தகவல் ஒலிபரப்பும் ஒரே சாதனமாக விளங்கிய வானொலி பெட்டியை வைத்து பொதுமக்களுக்கு ஒலிபரப்பும் வானொலி நிலையத்தை, பேரூராட்சி நிதித்திட்டத்தின் கீழ் வாழப்பாடி கிழக்குகாடு பகுதியில் அமைத்தார். 50 ஆண்டுகள் கடந்தும் இந்த வானொலி நிலையத்தின் சிறிய கட்டம் இன்றளவும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. எனவே, இந்த வானொலி நிலைய கட்டடத்தைப் புதுப்பித்து வானொலியின் நினைவுச்சின்னமாக மாற்ற வேண்டும். இப்பகுதியிலுள்ள அரசு நிலத்தில் சிறுவர் பூங்கா அமைத்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com