கழுதைகள்தான் எங்களுக்கு சோறு போடும் குழந்தைகள்: கழுதைப்பால் விற்கும் குழந்தையில்லா தம்பதியர் உருக்கம்! 

கழுதைகள் தான் எங்களுக்கு சோறு போடும் குழந்தைகள் என குழந்தைகளை தங்கள் குழந்தைகளாக நினைத்து வளர்க்கின்றனர் கழுதைப்பால் விற்கும் குழந்தையில்லா தம்பதியர்.
கழுதைகளுடன் ராமசாமி
கழுதைகளுடன் ராமசாமி
Updated on
2 min read

வாழப்பாடி: தமிழகம் முழுவதும் கால்நடையாக சென்று, கழுதைப்பால் விற்பனை செய்து வரும் குழந்தையில்லா முதிய தம்பதியர்,  கழுதைகளுக்கு பெயர்சூட்டி, தனது குழந்தைகளைப் போல  வளர்த்து வருவதோடு, இந்த கழுதைகள் தான் எங்களுக்கு சோறு போடும் குழந்தைகளென உருக்கமான கூறி, அவைகளோடு வாழ்ந்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசையாய் பெற்று அன்போடு வளர்க்கும் குழந்தைகள், சிறிய தவறு செய்தாலோ, சொல்பேச்சு கேட்கவில்லை என்றாலோ, வீட்டு பாடங்கள் எழுதப்படிக்க தவறினாலோ, பொதுவாக பெரும்பாலான பெற்றோர்கள்  தனது குழந்தைகளை 'கழுதைகள்' எனக்கூறி  திட்டுவது பழக்கமாக மாறிவிட்டது.

தனது குழந்தைகளுக்கு மிகுந்த பாசம் காட்டி, எவ்வளவு சிரமப்பட்டேனும் தேவையான பொருள்களை உடனுக்குடன் வாங்கி கொடுத்து பொத்தி பொத்தி வளர்த்தாலும், ஒரு சில குழந்தைகள் தனது பெற்றோர்களுக்கு வயோதிக காலத்தில் கவனிக்காமல் விட்டு விடுவதும் முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.

இருப்பினும் குழந்தை இல்லாத தம்பதியர், தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையே என மன வேதனையில் வாழ்வது மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட தம்பதியர் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டோ, உறவினர்களின் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்தோ மனதை மாற்றிக்கொள்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் ராமசாமி (75). இவரது மனைவி செல்லம்மாள் (70). சிறுவயதிலேயே ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியருக்கு, குழந்தை பாக்கியம் இல்லை. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த இத்தம்பதியருக்கு போதிய வருமானம் கிடைக்காததால், இவர்களது குலத் தொழிலான கழுதைப்பால் விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

பல ஆண்டுகளாக கழுதைகளை வளர்த்து வரும் இத்தம்பதியர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கழுதைகளோடு கால்நடையாக சென்று, கழுதைப்பால் கறந்து  விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

தங்களுக்கு குழந்தைகள் இல்லாததால், வருவாயை ஈட்டிக் கொடுக்கும் இந்த கழுதைகளுக்கு, குழந்தைக்கு பெற்றோர்கள் பெயர் சூட்டுவதைப்போல, வெள்ளச்சி, குள்ளி என பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். குழந்தை இல்லாத இத்தம்பதியர், கழுதைகளை குழந்தைகளாக கருதி,  பெயர் சூட்டி கொஞ்சி மகிழ்வது பொதுமக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கழுதைகளோடு வந்திருந்த இத்தம்பதியர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது:

எங்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதால் வேதனைப்பட்டோம். எங்களோடுள்ள கழுதைகளைதான் குழந்தைகளாக கருதி வளர்த்து வருகிறோம். இந்த 4 கழுதைகளும் தான் பெற்ற பிள்ளைகளை போல, பல ஆண்டுகளாக உழைத்தும், பால் கறந்தும் இந்த வயதில் எங்களுக்கு சோறு போட்டு வருகின்றன. 

இந்த கரோனா பெருந்தொற்று பொதுமுடக்க காலத்திலும்கூட, இந்த கழுதைகள் எங்களுக்கு உழைத்து சம்பாதித்துக் கொடுத்தன. எங்கள் வாழ்வாதாரத்திற்கு வருவாய் ஈட்டி கொடுத்து வரும் இக்கழுதைகளை, பெற்ற பிள்ளைகளாக கருதி பெயர் சூட்டி வளர்த்து வருவதில் பெருமையே. குழந்தை இல்லாத கவலையை இந்த கழுதைகள் நிவர்த்தி செய்து விட்டதாகவும் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com