கி.ரா. விருது பெற்றார் கண்மணி குணசேகரன்

கி.ரா. என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு கி.ரா. விருது வழங்கப்பட்டது.
கி.ரா. விருது பெற்றார் கண்மணி குணசேகரன்
Updated on
2 min read

புதுச்சேரி: கி.ரா. என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு கி.ரா. விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வரும் எழுத்தாளர் கி.ரா.வின் 99-ஆவது பிறந்த நாள் விழா "கி.ரா. நூற்றாண்டை நோக்கி' என்ற பெயரில், அவரது வீட்டில் புதன்கிழமை எளிமையாகக் கொண்டாடப்பட்டது. "கி.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள்' என்னும் நூலும் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, க.லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., எழுத்தாளர் இளம்பாரதி உள்ளிட்ட தமிழறிஞர்கள் நேரில் சென்று கி.ரா.வை வாழ்த்தினர். எம்.பி.க்கள் கனிமொழி, துரை.ரவிக்குமார், நடிகர்கள் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாலையில் கி.ரா. விருது வழங்கும் நிகழ்ச்சி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. எழுத்தாளர் கி.ரா. பெயரில் கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில், இந்த விருது வழங்கப்பட்டது. விருதுக்கான கொடையை ஈரோடு சக்தி மசாலா குழுமம் வழங்கியது.
இந்த விருதுக்கு தேர்வான எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு விருதையும், ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையையும் வழங்கி கி.ரா. பாராட்டினார். பேராசிரியர் ரகு, அட்சரம் பதிப்பக பதிப்பாளர் என்.ஏ.எஸ்.சிவக்குமார், கி.ரா.வின் மகன்கள் ரா.திவாகர், ரா.பிரபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பேசியதாவது:
சிறுகதை வடிவங்கள் தோன்றிய இடமான, வாய்மொழிக் கதைகளே இனி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிறுகதைக்கு ஒரு வடிவம் உருவாகியிருந்தாலும், அதுவும் உடையும். "கோபல்ல கிராமம்' வெளியானபோது, அது நாவல் வடிவம் இல்லை என்றார்கள். தற்போது அதை முதல் தரமான நாவல் என்கிறார்கள். இந்தக் கருத்தும் மாறலாம்.
எழுத்தாளர் கண்மணி குணசேகரன் மக்களைப் படித்து, கதைகளை பேச்சு நடையில் எழுதுகிறார். அனைவருக்கும் அதைப் புரிய வைக்க அகராதியை உருவாக்குகிறார். மக்கள் எழுத்தாளரான அவரை உற்சாகப்படுத்தவே பாராட்டுகிறோம். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் சொல்வதிலும் நியாயம் உள்ளதால், அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றார் அவர்.
விருது பெற்ற எழுத்தாளர் கண்மணி குணசேகரன் பேசியதாவது:
மக்களிடம் இருக்கும் சொற்களை தேடித் தொகுப்பதே வட்டார வழக்காகும். இந்த மண்ணின் முதல் உரிமையே, வட்டார வழக்கு எழுத்தாளனுக்குத்தான் என்றார்.
எழுத்தாளர் கண்மணி குணசேகரன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விருத்தாசலம் பணிமனையில் ஊழியராக பணியாற்றுகிறார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அவர், தொழில்கல்வி (ஐடிஐ) முடித்துள்ளார். கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள், புதினங்களை எழுதியுள்ளார்.
அஞ்சலை, நெடுஞ்சாலை, கோரை, வந்தாரங்குடி, பூரணி, பொற்கலை ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். இவரின், நடுநாட்டுச் சொல்லகராதி எனும் நூல், தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2007-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் அகராதி வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
விழா இணைய வழியில் (ஸþம் காணொலி) நேரடியாக ஒளிபரப்பானது. விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம் வரவேற்றார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன்,  ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், சக்தி மசாலா நிறுவனத்தின் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், நாஞ்சில் நாடன், க.பஞ்சாங்கம், நடிகர் சிவகுமார், வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நீதியரசர் ஆர்.மகாதேவன் சிறப்புரையாற்றினார். கண்மணி குணசேகரன் ஏற்புரை வழங்கினார். பேராசிரியர் கந்தசுப்பிரமணியன் ஒருங்கிணைத்தார்.
இந்த விருதுக்கான தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக விஜயா பதிப்பகத்தார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com