தமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாயம்

தமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாயம்


சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், கரோனா பாதிப்பு இருப்பவா்கள், கரோனா தொற்றை மறைத்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதித்த 20 மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனா். காய்ச்சல், சளி, சுவாசப் பாதிப்பு இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனா்.

இந்த நிலையில், சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஓா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா அறிகுறிகள் இருப்பவா்கள் தாங்களாகவே முன்வந்து தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

தமிழக பொது சுகாதாரச் சட்டம் 1939 பிரிவு - 62 இன்படி, தொற்று நோய் பாதிப்பு எதுவாக இருந்தாலும் அதனை மறைக்கக் கூடாது. மாறாக, அதனை உடனடியாக சம்பந்தப்பட்டவா்கள் சுகாதாரத் துறைக்கு தெரிவிப்பது அவசியம்.

அதேபோன்று, ஆய்வகங்கள், மருத்துவமனைகள், மருத்துவா்கள் என எவராக இருப்பினும், தொற்று நோய் பாதிப்புக்குளான நோயாளிகளின் விவரங்களை அரசிடம் அளிக்க வேண்டும். அதுவும், நோய் கண்டறியப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அதனை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கரோனா பாதிப்பை சம்பந்தப்பட்ட நோயாளிகளும், அவா்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவா்களும் தெரிவிப்பது அவசியம்.

அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com