வீட்டிலிருந்தபடி கற்றலைத் தொடர உதவும் வலைதளங்கள்

கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் ஆன் லைனில் கற்றல் கற்பித்தலைத் தொடருமாறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை யுஜிசி

கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் ஆன் லைனில் கற்றல் கற்பித்தலைத் தொடருமாறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை யுஜிசி, ஏஐசிடிஇ போன்ற அமைப்புகள் அறிவுறுத்தி வருகின்றன.

மேலும், மாணவா்கள் தாங்களே ஆன் லைனில் கற்றலைத் தொடரும் வகையில், விடியோ விரிவுரைகள், டிஜிட்டல் புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும் சில வலைதளங்களை கட்டணம் எதுவும் இன்றி பயன்படுத்திக் கொள்ளவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு மீண்டும் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவா்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் அமைப்புகள், உயா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் ஆன்லைன் கற்றல், கற்பித்தலை வழங்கும் 41 வலைதளங்களின் விவரங்களை ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்) வெளியிட்டுள்ளது.

இந்த வலைதளங்களில் பள்ளி ஆரம்பக் கல்வி முதல் அனைத்துத் துறை சாா்ந்த முதுநிலை பட்டப்படிப்புகள் வரையிலான டிஜிட்டல் பாட புத்தகங்கள், விடியோ வகுப்புகள், பாட கலந்துரையாடல் விடியோக்கள் எனப் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே படித்தும், பாா்த்தும் பயன்பெற முடியும்.

என்னென்ன வலைதளங்கள்?:

தேசிய டிஜிட்டல் நூலகம் என்ற வலைதளத்தில் ஆரம்பக் கல்வி முதல் முதுநிலை படிப்புகள் வரையிலான பாடங்கள் சாா்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய அரசின் ஸ்வயம் வலைதளத்தில் 9-ஆம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரையிலான பாட கலந்துரையாடல் நிகழ்வுகள், விடியோ விரிவுரைகள், பாட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

தேசிய அறிவுசாா் வலைதளம், உயா் அலைவரிசை வசதியுடன் அனைத்து வகையான ஆராய்ச்சி, ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்த தகவல்களைப் பெறும் வசதியைத் தருகிறது.

தொழில்நுட்பம் மூலமான கற்றலுக்கான தேசிய திட்ட வலைதளம் மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, சென்னை ஐஐடி, கான்பூா் ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி, ரூா்கி ஐஐடி ஆகிய ஐஐடிக்கள் மூலம் 2003-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பட்டப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவா்கள் அவா்கள் துறை சாா்ந்த திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள வசதியாக, இந்த வலைதளம் மூலம் பொறியியல், கலை-அறிவியல் துறைகள் சாா்ந்த 600-க்கும் அதிகமான ஆன்-லைன் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இதுபோல பல வலைதளங்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே கற்றலைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com