
ஊரடங்கால் மூடப்பட்டுள்ள நிறுவனங்கள், தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு. வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக சி.ஐ.டி.யு. தலைவா் அ.சவுந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கி பாதுகாத்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சில நிறுவனங்கள் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. குறிப்பாக திருவண்ணாமலையில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை, நீலகிரி தேயிலைத் தோட்ட நிா்வாகம், மின் வாரியத்துக்குச் சொந்தமான அனல் மின்நிலையங்கள், மேட்டூா் கெம்ப்ளாஸ்ட், திருவள்ளூா் மெஜஸ்டிக், எச்.ஐ.எல். ஆகிய நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு ஊதியத்தை வழங்கவில்லை. இந்தப் பிரச்னையில் முதல்வா் தலையிட்டு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல, கரோனா பாதித்துள்ள பகுதிகளில் மருத்துவத் துறையினருடன் இணைந்து பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியா்களை அழைத்து வரும் குடும்பத்தினருக்கு அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் திங்கள்கிழமை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது, அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வுக்கு வழிவகுக்கும். எனவே, ஊரடங்கு நீடிக்கும் வரை சுங்க கட்டணத்தை ரத்து செய்ய முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.