வல்வில் ஓரி விழா: களையிழந்த கொல்லிமலை!

கரோனா பொது முடக்கத்தால், ஆடிப் பெருக்கையொட்டி கொண்டாடப்படும் கொல்லிமலை வல்வில் ஓரி விழா நிகழாண்டில் சுற்றுலா பயணிகள் வருகையின்றி களையிழந்து காணப்பட்டது.
கொல்லிமலை வல்வில் ஓரி மன்னன் சிலை முன்பாக பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸார்.
கொல்லிமலை வல்வில் ஓரி மன்னன் சிலை முன்பாக பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸார்.

கரோனா பொது முடக்கத்தால், ஆடிப் பெருக்கையொட்டி கொண்டாடப்படும் கொல்லிமலை வல்வில் ஓரி விழா நிகழாண்டில் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி களையிழந்து காணப்பட்டது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. இங்குள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்து மகிழவும், பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்டவற்றுக்கு செல்லவும் 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து பிற மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். 

இம்மலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னனுக்கு  ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு நாளன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா எடுக்கப்படும். அதனை முன்னிட்டு அதிகாரிகள், பல்வேறு அமைப்பினர் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிப்பர். மேலும்  ஆடிப்பெருக்கு விழாவும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படும். மேலும் அங்குள்ள கலையரங்கில் பல்துறை விளக்கக் கண்காட்சிகள், தோட்டக்கலைத் துறையின் மலர் கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சமூக நலத்துறை சார்பில் பெண்கள், சிறுவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிகள் இரண்டு நாள்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.

ஆண்டுதோறும் பாரம்பரியமாக கொண்டாடப்படும் வல்வில் ஓரி விழா, ஆடிப்பெருக்கு விழா நிகழாண்டில் கரோனா தொற்று பரவலால் தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், வெளி மாவட்டத்தினர் கொல்லிமலை வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பல்வேறு அமைப்புகளை சார்ந்தோர் வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 15 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வோர் அமைப்பிலும் 4 பேர் வீதம், 2 மணி நேர இடைவெளியில் மலைப்பகுதிக்கு சென்று வர அறிவுறுத்தப்பட்டது. மேலும் 19 கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு அதன்படியே  செயல்பட வேண்டும் எனவும் ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது.

வெறிச்சோடி காணப்படும் செம்மேடு பேருந்து நிலைய சாலை
வெறிச்சோடி காணப்படும் செம்மேடு பேருந்து நிலைய சாலை

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நேர இடைவெளி  விட்டு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்தனர். வேறு எந்த நிகழ்வுகளும் அங்கு நடைபெறாததால் அங்குள்ள கலையரங்கம் மற்றும் அரப்பளீஸ்வரர் கோயில் பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொல்லிமலை வாழ் பழங்குடியின மக்களும் வல்வில் ஓரி விழா நடைபெறாததால் வேதனையடைந்தனர். இந்த விழா நாள்களில்  கொல்லிமலையில் விளையும் பலா, வாழை, அன்னாசி பழங்களை சுற்றுலா பயணிகள் அதிகம் வாங்கி செல்வர். வல்வில் ஓரி விழா ரத்தானதால் அப்பழங்கள் கடைகளில்  விற்பனையின்றி வீணாகும் நிலையில் காணப்பட்டது. கரோனா தொற்று முடிவுக்கு பிறகாவது கொல்லிமலை மக்கள் மகிழும் வகையிலும், பயனடையும் வகையிலும் சிறப்பு  விழா ஒன்றை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com