
கோப்புப்படம்
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,871 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,871 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,844, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 27 பேர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 6-வது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் குறைவாக 993 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 119 பேர் (அரசு மருத்துவமனை -78, தனியார் மருத்துவமனை -41) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,278 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 5,633 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,56,313 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 52,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மட்டும் 71,575 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 34,32,025 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி அரசு ஆய்வகங்கள் 61, தனியார் ஆய்வகங்கள் 72 என மொத்தம் 133 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.