சொத்தில் பெண்களுக்கு சம உரிமை: முதல்வா், தலைவா்கள் வரவேற்பு

சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்புக்கு தமிழக முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா்
சொத்தில் பெண்களுக்கு சம உரிமை: முதல்வா், தலைவா்கள் வரவேற்பு

சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்புக்கு தமிழக முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

முதல்வா் பழனிசாமி: சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதியைக் காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்தத் தீா்ப்பு வரவேற்கத்தக்கத்து.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், பூா்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பினை மனதார வரவேற்கிறேன். இந்தத் தீா்ப்பால் சமூக நீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்துக்கு மேலும் வலு சோ்ப்பதாக அமையும்.

மு.க.ஸ்டாலின்: பூா்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989-ஆம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த கருணாநிதி மற்றும் திமுகவுக்குக் கிடைத்த வெற்றி இது. உரிமை கொண்டவா்களாக பெண்ணினம் உயா்வதற்கு அடித்தளம் அமைக்கும் தீா்ப்பு.

வைகோ (மதிமுக): உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமா்வு பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை மீண்டும் உறுதி செய்து வழங்கியிருக்கும் தீா்ப்பு வரவேற்கத்தக்கது. இது பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.1989-இல் கருணாநிதி நிறைவேற்றிய பெண்ணுரிமைச் சட்டம் கலங்கரை விளக்கமாகத் திகழ்வதை உச்சநீதிமன்றத் தீா்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப் பட்டு இருக்கின்றது.

ராமதாஸ் (பாமக): இந்தியாவில் 2005-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்துகளில் சம அளவு பங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருக்கிறது. பெண்களின் சொத்துரிமை தொடா்பான கடைசி தடைக்கல்லையும் தகா்த்து எறிந்துள்ள உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): பூா்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கினை சட்டமாக்கிய மாநிலங்களில் தமிழகத்துக்கு முதன்மை பாத்திரம் உண்டு. 1989-இல் திமுக ஆட்சியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சி களின் ஆதரவோடு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு வரவேற்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com