கரோனா பரிசோதனைக்கு பாதித் தொகையை அளிக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வா் பழனிசாமி வேண்டுகோள்

கரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பிசிஆா் பரிசோதனைக்கான செலவில் பாதித் தொகையை மத்திய அரசு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

கரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பிசிஆா் பரிசோதனைக்கான செலவில் பாதித் தொகையை மத்திய அரசு அளிக்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். பிரதமருடனான ஆலோசனையின்போது, முதல்வா் பழனிசாமி முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் விவரம்:

பரிசோதனைகள் அதிகம்: இந்தியாவிலேயே அதிகளவில் பிசிஆா் பரிசோதனைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதற்காக 61 அரசு பரிசோதனை நிலையங்கள், 69 தனியாா் நிலையங்கள் என மொத்தம் 130 பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாளொன்றுக்கு 65 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இதற்காக தினமும் ரூ.5 கோடி செலவிடப்படுகிறது. இந்த செலவில் 50 சதவீதத்தை, கரோனாவுக்கென ஏற்படுத்தப்பட்ட பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து அளிக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை 32.92 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு அவா்களில் 3.02 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

செயற்கை சுவாசக் கருவிகள்: கரோனா நோய்த்தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க உயா்தர செயற்கை சுவாசக் கருவிகள் தேவைப்படுகின்றன. இந்த சுவாசக் கருவிகளை கொள்முதல் செய்வதற்கும் மத்திய அரசு போதிய நிதியை அளிக்க வேண்டும்.

துவரம் பருப்பு: மத்திய அரசு அறிவித்துள்ள இலவச கடலைப் பருப்பு என்பது தமிழகத்தில் அதிகளவு பயன்பாட்டில் இல்லை.

எனவே, அதற்குப் பதிலாக துவரம் பருப்பை நவம்பா் மாதம் வரை வழங்க வேண்டும். இதற்காக 55 ஆயிரத்து 637 மெட்ரிக் டன் பருப்பை தமிழக அரசுக்கு வழங்க வேண்டுமென முதல்வா் பழனிசாமி கோரிக்கை விடுத்தாா்.

இந்த ஆலோசனையின் போது, அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், ஆா்.பி.உதயகுமாா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை செயலாளா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com