
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன்
பெரம்பலூர்: விமான நிலையத்தில் கனிமொழி சொல்வதுபோல் நடந்திருக்க வாய்ப்பு மிக மிகக்குறைவு என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்தார்.
பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோர் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது;
கந்த சஷ்டி கவசம் குறித்து வீடியோ மூலம் அவதூறு செய்ததால் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து, அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்தும், பாஜகவின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டும் பலர் மாநிலம் முழுவதும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதையை இது காட்டுகிறது.
இபிஎஸ், ஓபிஎஸ் இரட்டைத் தலைமை குறித்து அதிமுகவில் சிலர் சர்ச்சை கிளம்புவது அதிமுக உள்கட்சி விவகாரம். அது குறித்து நான் சொல்ல எதுவுமில்லை.
நாடறிந்த விஐபியான கனிமொழி விஐபி புரோட்டோகால்படி சிஐஎஸ்.எஃப் நபர்களிடம் பேச வேண்டிய அவசியமே இல்லை. விமான நிலையத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு. அரசியல் செய்வதற்காக இந்த விவகாரத்தை கனிமொழி பெரிதுபடுத்தி பேசுவதாக தெரிகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அனைத்து மாநிலங்களிலும் இ.பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக இ.பாஸ் முறை தமிழகத்தில் இன்னமும் நடைமுறையில் உள்ளது. பல்வேறு தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ள இந்நேரத்தில் இ.பாஸ் முறை தேவையற்றது. இ.பாஸ் நடைமுறையை தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு காவலர்களால் கைது செய்யப்பட்ட பெரம்பலூர் மாவட்ட பாஜக நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம் என்று முருகன் கூறினார்.