
கரோனாவில் இருந்து மீண்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆளுநா் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த வாரம் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதில் அவருக்கு மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், அவருக்கு லேசான தொற்று இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர்.
இதையடுத்து, தொடர்ந்து அவருக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை, இயல்பாகச் செயல்படுகிறார். அவர் நலமாக இருக்கிறார் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பன்வாரிலால் புரோஹித்தின் மன உறுதி மற்றும் ஒத்துழைப்பும் தான் கரோனாவில் அவர் விரைவில் குணமடைய உதவியது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G