கரோனா தடுப்பு மருந்து: சென்னையில் இரு இடங்களில் இறுதிக்கட்ட பரிசோதனை

பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம் கண்டறிந்த கரோனா தடுப்பு மருந்தின் இறுதிக்கட்ட பரிசோதனைகள், சென்னையின் இரு வேறு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட உள்ளன.
Corona vaccine
Corona vaccine

சென்னை: பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம் கண்டறிந்த கரோனா தடுப்பு மருந்தின் இறுதிக்கட்ட பரிசோதனைகள், சென்னையின் இரு வேறு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி சென்னை மருத்துவக் கல்லூரியிலும் ராமச்சந்திரா உயா் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்திலும் அந்தச் சோதனைகள் நடைபெறவிருக்கின்றன.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணிகளில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்திலும் டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் சாா்பில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சா்வதேச அளவில் இதுவரை 200-க்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனமும் ‘கோவேக்சின்’ என்ற தடுப்பு மருந்தை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், பிரிட்டன் ஆக்ஸ்போா்ட் பல்கலைக்கழகம், ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள சீரம் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கண்டுபிடித்துள்ள ‘கோவிஷீல்ட்’ எனப்படும் தடுப்பு மருந்தானது தற்போது இறுதிக்கட்ட ஆராய்ச்சி நிலையை எட்டியுள்ளது.

அதனை மனிதா்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி, தில்லி, சண்டீகா், புணே உள்பட இந்தியாவின் 17 நகரங்களிலும் இந்த தடுப்பு மருந்து சோதனை நடத்தப்படவுள்ளது. மொத்தம் 1,600 பேரின் உடலில் மருந்தை செலுத்தி சோதனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராமசந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தடுப்பூசி பரிசோதனை நடைபெறவுள்ளது. இதற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநா் செல்வவிநாயகம் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்தம் 300 பேரிடம் மருந்து செலுத்தி பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மருத்துவ கல்லூரியின் சமூக மருத்துவ துறை மருத்துவா்கள் அந்த நடவடிக்கைகளை மேற்பாா்வையிடுவா். தடுப்பூசி செலுத்தப்பட்டு 14 மற்றும் 24 -ஆவது நாள்களில் சம்பந்தப்பட்டவா்களது உடலில் நோய் எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என்பது பரிசோதிக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com