எச்.வசந்தகுமார் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்: திரளானோர் அஞ்சலி

கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல்தலைவருமான எச்.வசந்தகுமார் உடல் சொந்த ஊரான அகஸ்தீசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் வசந்தகுமாரின் உடல்
இறுதி ஊர்வலத்தில் வசந்தகுமாரின் உடல்

கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவருமான எச்.வசந்தகுமார் உடல் சொந்த ஊரான அகஸ்தீசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எச்.வசந்தகுமார் அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.

இதையடுத்து அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்திலும், காமராஜர் அரங்கத்திலும் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை இரவு ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரான அகஸ்தீசுவரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அகஸ்தீசுவரத்தில் உள்ள இல்லம் முன்பு இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி, மகன்கள் விஜய் வசந்த், வினோத்குமார், மகள் தங்கமலர் மற்றும் பொதுமக்கள், உறவினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

குறிப்பாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை, கே.டி.பச்சைமால், எம்.எல்.ஏக்கள் என்.சுரேஷ்ராஜன், எஸ்.ஆஸ்டின், மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார், அனிதா ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகிகள் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு அங்கிருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வீட்டின் அருகேயுள்ள அவருக்குச் சொந்தமான இடத்தில் அவரது பெற்றோரின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் திரளான பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com