மன்னார் வளைகுடா பகுதியில் ரூ. 5 கோடி மதிப்புள்ள கடல் வெள்ளரி அட்டைகள் பறிமுதல்

மன்னார் வளைகுடா வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ. 5 கோடி மதிப்புள்ள கடல் வெள்ளரி அட்டைகளை கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மன்னார் வளைகுடா வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ. 5 கோடி மதிப்புள்ள கடல் வெள்ளரி என அழைக்கப்படும் அட்டை வகை உயிரினங்களை கடலோரக் காவல்படையினர் சனிக்கிழமை மன்னார் வளைகுடா பகுதியில் நடுக்கடலில் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டிய மன்னார் வளைகுடா கடல்பகுதியில் ஏராளமான பவளப்பாறைகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பவளப்பாறைகளில் ஏராளமான அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள் உள்ளன. இவ்வகை  உயிரினங்களை பிடிக்கப்படுவதையும், வேட்டையாடப்படுவதையும் தடுக்கும் வகையில் அருகிவரும் உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் 2001- ஏற்படுத்தப்பட்டு இதில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.

தடை செய்யப்பட்ட உயிரனங்களில் கடல் வெள்ளரி என்ற அட்டை வகையும் ஒன்றாகும். நிலத்தில் வாழும் மண் புழுவைப் போல கடல் பகுதியில் மீன்வளம் பெருக கடல் வெள்ளரியும் ஒன்றாக இருந்து வருகிறது. ஆபத்து விளைவிக்கும் கழிவுகளை பலவற்றையும் கடல் வெள்ளரிகள் உண்கின்றன. கடல் வெள்ளரிகள் வெளியிடும் கழிவுகள் கடலின் அடியில் வாழும் உயிரினங்களுக்கு உணவாக இருந்து வருகிறது.  

வெள்ளரிக்காய் போல் தோற்றம் கொண்ட அட்டைகள்  

வெள்ளரிக்காயைப் போல தோற்றம் அளிக்கும் இந்த வகை அட்டைகளுக்கு சர்வதேச அளவில் பெரும் கிராக்கி உள்ளது.  எனவே, மன்னார் வளைகுடா பகுதியில் அதிக அளவில் காணப்படும் கடல் வெள்ளரிகளைப் பிடிக்கவும், வாங்கி விற்கும் பணியிலும் சில கடத்தல்காரர்கள் ஈடுபட்டு வருவதாக கடலோரக் காவல் படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்பட்டது.

இதனையடுத்து கடலோரக் காவல் படை ரோந்து கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள், ரோந்து விமானங்கள் தொடர்ச்சியாக தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்நிலையில், சனிக்கிழமை நண்பகல் நேரத்தில் மன்னார் வளைகுடா பகுதியை ஒட்டி சர்வதேச கடல் எல்லையிலிருந்து சுமார் 3.5 கடல் மைல் தூரத்தில் வேகமாகக் சென்று கொண்டிருந்த படகு ஒன்றை கடலோரக் காவல்படையினர் மடக்கிப் பிடித்தனர். பின்னர் நடைபெற்ற சோதனையில் படகில் சுமார் ஆயிரம் கிலோ கடல் வெள்ளரிகள் என்ற தடை செய்யப்பட்ட  அட்டை வகைகள் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து கடல் வெள்ளரிகளையும், படகினையும் பறிமுதல் செய்த கடலோராக் காவல்படையினர் மேல் நடவடிக்கைகளுக்காக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
       
இந்திய கடல்பகுதியில் சட்ட விரோதமாகப் பிடிக்கப்படும் இந்த அரிய வகை உயிரினங்கள் இலங்கை வழியாக கிழக்கு திசை நாடுகளுக்குக் கடத்தப்பட்டு உணவு மற்றும் மருந்து பொருள்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

சனிக்கிழமை பிடிக்கப்பட்ட கடல் வெள்ளரிகளும் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டதும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் வெள்ளரிகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 5 கோடி இருக்கலாம்.  இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையோர் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com