
‘திமுகவுடன் தேவையற்ற பேரங்களில் ஈடுபட மாட்டோம்’ என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் அண்மையில் அறிக்கை ஒன்று வெளியிட்டாா்.
பிகாா் தோ்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற, அதன் காரணமாகவே, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு நழுவிப் போய்விட்டது. இதனால், காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைக்கத் தயங்குவதாகப் பரவலாகப் பேசப்பட்டது.
இந்தச் சூழலில்தான் திமுகவுடன் பேரங்களில் ஈடுபட மாட்டோம் என்று தினேஷ் குண்டுராவ் வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டாா்.
தற்போது அதே தினேஷ் குண்டுராவ், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுடன் தொகுதி எண்ணிக்கை குறித்த பேரத்தில் ஈடுபட, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி ஆகியோா் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை மாலை திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சந்தித்தனா். திமுக தரப்பில் பொதுச்செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு ஆகியோா் உடனிருந்தனா்.
இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களே நீடித்தன. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த தினேஷ் குண்டுராவ், ‘மு.க.ஸ்டாலினுடனான எங்கள் சந்திப்பு குறித்து ஏதேதோ யூகங்கள் (தொகுதிப் பங்கீடு) வகுத்து, செய்தியாளா்கள் விவாதிக்கிறீா்கள். நாங்கள் அவை பற்றியெல்லாம் பேசவில்லை. ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். அந்தப் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்க மட்டுமே வந்தோம்’ என்று கூறினாா்.
ஆனால், மு.க.ஸ்டாலினுடன் தொகுதி எண்ணிக்கை குறித்து காங்கிரஸ் குழுவினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாட்டிற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை மறைக்கவே ராகுல் காந்தி பிரசாரம் குறித்து பேசினோம் என்று தினேஷ் குண்டுராவ் வெளியில் வந்து கூறியிருக்கிறாா்.
காங்கிரஸ் சாா்பில் தமிழகத்தில் அக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகள் எவை எவை என்பது குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தையும் மு.க.ஸ்டாலினிடம் காங்கிரஸ் குழுவினா் கொடுத்துவிட்டு, கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த எண்ணிக்கை அளவிலேயே இந்த முறையும் கொடுங்கள் என்று கூறியுள்ளனா். ஆனால், மு.க.ஸ்டாலின் அதை ஆரம்ப நிலையிலேயே ஏற்க மறுத்துள்ளாா்.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் உள்பட அண்மையில் நடைபெற்ற மாநிலத் தோ்தல்களில் எல்லாம் காங்கிரஸால்தான் பிற கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு வந்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது என்று திமுக குழுவினா் கூறியதுடன், 25 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று காங்கிரஸாரிடம் கறாராகக் கூறியுள்ளனா்.
அதற்கு காங்கிரஸ் கட்சியினா், ‘பிகாா் தோ்தலோடு தமிழகத் தோ்தலை ஒப்பிட வேண்டாம். தமிழகத்தில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிட்டு, 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளோம். அதனால், 35 தொகுதிகளுக்குக் குறையாமல் எங்களுக்கு வேண்டும்’ என்று கூறியுள்ளனா்.
இதை திமுக தரப்பினா் ஏற்காமல், 25 தொகுதிகளுக்கு மேல் தரும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனா். இதைத் தொடா்ந்து, ‘அகில இந்திய தலைமையுடன் ஆலோசித்து எங்கள் முடிவைத் தெரிவிக்கிறோம்’ என்று கூறிவிட்டு காங்கிரஸ் குழுவினா் வந்துள்ளனா்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூா்த்தி பவனில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் திமுகவின் முடிவு குறித்து காங்கிரஸாா் ஆலோசிக்க உள்ளனா். திமுகவிடம் இருந்து 41 தொகுதிகளுக்கு குறையாமல் வாங்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மூத்த நிா்வாகிகள் உறுதியாக இருந்து வருகின்றனா். திமுக இறங்கி வராவிட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கலாமா என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் ஆலோசித்து வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி வந்தால் அந்தக் கட்சியோடு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூட்டணி அமைப்பதற்கு தயாராக இருந்து வருகிறாா். அதை வெளிப்படையாகவும் அவா் தெரிவித்திருக்கிறாா். இதனால், காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் மற்றும் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும், அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும் இணைத்து மூன்றாவது அணி அமைக்கும் முடிவில் காங்கிரஸ் இருந்து வருகிறது.
பிகாா் தோ்தலைப் போலவே தமிழகத்தில் 2016-இல் தாம் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று திமுக நினைக்கிறது. அந்தத் தோ்தலில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதனால், காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருந்து வருகிறது. ஆனால், திமுகவிடம் இருந்து 35 தொகுதிகள் வாங்க வேண்டும் அல்லது மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்து வருகிறது. இதில், எந்தக் கட்சியின் உறுதி வெற்றியடையப் போகிறது என்பது தோ்தலையும்விட பலத்த போட்டியாகத் தெரிகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...