தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம்

சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம், தேசிய அளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம்
சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம்

சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம், தேசிய அளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் 2020ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்தற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தேசிய அளவில் இரண்டாவது காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்திய அளவில் காவல் நிலையங்கள், கண்காணிக்கப்பட்டு சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களுக்கு  குழுக்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த குழுவினர் காவல் நிலையங்களுக்குச் சென்று காவல் நிலையங்கள் பராமரிப்பு மற்றும் மனு தர வரும் பொதுமக்களிடம் போலீஸாரின் அணுகுமுறை, வழக்கு விசாரணைகளில் தண்டனை பெற்றுத் தரும் விபரம், நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த விவரம் ஆகியவை  குறித்து முழுமையாக விசாரித்து பின்னர் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது.

இதுபோல 2020 ஆம் ஆண்டிற்கு சிறந்த காவல் நிலையங்கள் குறித்து தேர்வு செய்ய ஆய்வு நடந்து வந்தது. இந்த நிலையில் தேசிய அளவில் முதல் காவல் நிலையமாக மணிப்பூர் மாநில காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் இரண்டாவது  இடத்தைப் பிடித்துள்ளது. இது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் உமாராணி, ரெஜினா பிவீ மற்றும் 17 பெண் காவலர்கள் சிறப்பாக பணியாற்றி  10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதுதவிர சிறுமிகள் பாலியல் வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து 6 க்கும் மேற்பட்டோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் வழக்கு விசாரணை மற்றும் ரெக்கார்டுகள் பராமரிப்பதிலும் சிறப்பாக  இருந்ததால் தேசிய அளவில் 2வது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு  விருது பெற்றுள்ளது.

இதையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், சூரமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி மற்றும் இங்கு பணியாற்றும் அனைத்து பெண் காவலர்களை பாராட்டி மேலும் திறம்பட பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டு அவர்களுக்கு  வாழ்த்து கூறினார்.

மேலும், இதற்கான விருதை பெற்ற காவல் ஆய்வாளர் வளர்மதி தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார், துணை ஆணையாளர் சந்திரசேகரன், உதவி கமிஷனர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com