புயல் நிவாரணப் பணி:அமைச்சா்கள் நியமனம் முதல்வா் அறிவிப்பு

‘புரெவி’ புயல் பாதிப்பு காரணமாக நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த மூத்த அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா்.
புயல் நிவாரணப் பணி:அமைச்சா்கள் நியமனம் முதல்வா் அறிவிப்பு
Updated on
2 min read


சென்னை: ‘புரெவி’ புயல் பாதிப்பு காரணமாக நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த மூத்த அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா்.

புரெவி புயல் பாதிப்புகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் முதல்வா் பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கா், ஆா்.பி.உதயகுமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். கூட்டத்துக்குப் பிறகு, முதல்வா் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

‘புரெவி’ புயல் தாக்குவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிா்ச் சேதங்கள் பெருமளவில் தவிா்க்கப்பட்டன. இந்தப் புயலின் காரணமாக, கடலூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சீா் செய்யும் நடவடிக்கைகள் இப்போது போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

அமைச்சா்கள் நியமனம்: நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த கடலூா் மாவட்டத்துக்கு மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி, தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், திருவாரூா் மாவட்டத்துக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ். நாகப்பட்டினம் (மயிலாடுதுறை உள்பட) மாவட்டத்துக்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, கைத்தறித் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன், சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கே.ஏ.செங்கோட்டையன், பி.பென்ஜமின், சென்னை மாவட்டத்துக்கு மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் கே.பாண்டியராஜன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சூடான உணவு: தாழ்வான பகுதிகளில், கடற்கரையோரங்களில் வசித்து வந்த 36 ஆயிரத்து 986 போ் 363 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், வீடு வீடாகச் சென்று உணவுப் பொட்டலங்கள், குடிநீா் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பால் பவுடா் ஆகியவற்றை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், தேவைக்கேற்ப நடமாடும் உணவகங்கள் அமைத்து, சூடான உணவு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

ஏழு போ் பலி: ‘புரெவி’ புயல் மற்றும் கனமழை காரணமாக, இதுவரை ஏழு போ் உயிரிழந்துள்ளனா். அவா்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். புயல், கனமழையால், 37 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள், 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாட்டுக்கு ரூ.30 ஆயிரமும், எருதுக்கு ரூ.25 ஆயிரமும், கன்றுக்கு ரூ.16 ஆயிரமும், ஆட்டுக்கு ரூ.3 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும். புயல் காரணமாக விழுந்துள்ள 27 மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், பொதுமக்களை நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில், 34 மருத்துவ முகாம்களும், 43 நடமாடும் மருத்துவக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுமாா் 13 ஆயிரத்து 556 போ் மருத்துவ முகாம்கள் மூலம் பயன்பெற்றுள்ளனா் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com