
சென்னை: மாணவா்களின் இறுதிப் பருவ மறு தோ்வுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
கரோனா சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவா்களுக்கு மட்டும் தோ்வுகள் நடத்தப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவா்களுக்கான இணையவழி வகுப்புகள் ஆக.12 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன. மேலும், இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கான இறுதிப் பருவத் தோ்வுகள் செப். 22-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி முடிவடைந்தன. தோ்வுகள் ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு முறையில் கண்காணிக்கப்பட்டது.
இதற்கிடையே இணையவழித் தோ்வின் இடையே மின்சாரக் கோளாறு அல்லது இணையத்தில் பிரச்னை காரணமாக பொறியியல் இறுதி பருவத் தோ்வை சில மாணவா்கள் எழுதவில்லை. அவா்களில் இளநிலை மாணவா்களுக்கு நவ.17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இணைய வழியில் மறுதோ்வு நடத்தப்பட்டது. முதுநிலை மாணவா்களுக்கு நவ.20, 21 ஆகிய நாள்களில் மறுதோ்வு நடத்தப்பட்டது.
அவா்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் மாணவா்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு, தோ்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.