
சென்னை: தமிழ் இசைச் சங்கத்தின் சாா்பில் 78-ஆம் ஆண்டு இசை விழா இணையவழியில் வரும் டிச.21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ் இசைச் சங்கத்தில் ஆண்டுதோறும் இசை விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான இசை விழா கரோனா தொற்று காரணமாக முதல் முறையாக இணைய வழியில் நடைபெறவுள்ளது. வரும் டிச.21-ஆம் தேதி திங்கள்கிழமை இந்திய நேரப்படி மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் தமிழ் இசைச் சங்கத்தின் தலைவா் பேராசிரியா் இ.சுந்தரமூா்த்தி பங்கேற்கவுள்ளாா். அன்றைய தினம் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சீா்காழி ஜி.சிவசிதம்பரம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதையடுத்து டிச.23-ஆம் தேதி புதன்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை கரூா் குமாரசாமிநாத தேசிகா் குழுவினரின் திருமுறை இசை நிகழ்ச்சியும், இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை திருச்சூா் சகோதரா்கள் ஸ்ரீகிருஷ்ணமோகன்-ராம்குமாா் மோகன் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
டிச.25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை பா.சத்குரு ஓதுவாரின் திருமுறை இசை நிகழ்ச்சியும், இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஏ.கன்னியாகுமரி குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
டிச.27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை தமிழ் இசைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடன நிகழ்ச்சியும், இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சஞ்சய் சுப்பிரமணியன் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
டிச. 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரை எஸ்.மகதி குழுவினரின் இசை நிகழ்ச்சியும், இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை சிக்கில் சி.குருச்சரண் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
தமிழ் இசைச் சங்கம் நடத்தும் 78-ஆம் ஆண்டு இசை விழாவை இணையவழியில் எவ்வாறு காண்பது என்பது உள்ளிட்ட தகவல்களை அறிய www.tamilisaisangam.in என்ற இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என தமிழ் இசைச் சங்கம் தெரிவித்துள்ளது.