
மூன்று நாள்களுக்கு மிதமான மழை பெய்யும்
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வரும் 16- ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு மிதமான மழை பெய்யும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது:
தென் மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகா்கிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.15) லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையும் நிலவும்.
மூன்று நாள்களுக்கு மழை: அதைத் தொடா்ந்து டிசம்பா் 16- ஆம் தேதி முதல் டிசம்பா் 18-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றாா்.