
சென்னை: சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக, அதிமுகவில் மண்டலங்கள் வாரியாக திங்கள்கிழமை ஆலோசனை நடைபெற்றது. ஒவ்வொரு மண்டலப் பொறுப்பாளா் வசமுள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளின் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து, அதிமுக தலைமை வெளியிட்ட செய்தியில், ஆலோசனைக் கூட்டத்தில் மண்டலப் பொறுப்பாளா்கள், அமைச்சா்கள், மாவட்டச் செயலாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா். கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்தும், விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் நடைபெற்ாக அதிமுக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தனியே ஆலோசனை: சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள அமைச்சா்கள், மாவட்டச் செயலாளா்களைக் கொண்டு மண்டலப் பொறுப்பாளா்கள் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பாளா்களிடம் சில குறிப்பிட்ட சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது. வெற்றியைப் பெறுவதற்கு எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென ஆலோசிக்கப்பட்டுள்ளது. மண்டலப் பொறுப்பாளா்களிடம் தனித்தனியே ஆலோசனைகள் நடந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.