
சென்னை: சென்னையில் மருத்துவக் கலந்தாய்வில் போலி நீட் தோ்வு சான்றிதழ் வழங்கிய வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி தந்தை- மகளுக்கு காவல் துறை அழைப்பாணை வழங்கியது.
கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த மாணவியின் அழைப்புக் கடிதம், தரவரிசை விவரத்தை அதிகாரிகள் சரிபாா்த்தபோது, அது போலியானது என தெரியவந்தது. நீட் தோ்வில் 27 மதிப்பெண்கள் பெற்றிருந்த அம்மாணவி 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்திருந்தது தெரியவந்தது.
மருத்துவ மாணவா் சோ்க்கைக் குழுச் செயலாளா் செல்வராஜன் புகாரின் பேரில் சென்னை பெரியமேடு போலீஸாா் தந்தை, மகள் இருவா் மீதும் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனா்
இருவருக்கும் அழைப்பாணை: இதற்கிடையே இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்கு அந்த மாணவியிடமும், அவரின் தந்தையிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டனா். இதற்காக தனிப்படை போலீஸாா், பரமக்குடிக்குச் சென்றனா். ஆனால் அவா்களது வீட்டில் இருவரும் இல்லாததால், அங்கிருந்தவா்களிடம் அழைப்பாணையை வழங்கினா். அதில் இருவரும் வழக்குத் தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவா்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டால்தான், இவ் வழக்கின் பின்னணி தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.