
புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கு
இந்தியத் திரைப்பட விழா புதுச்சேரியில் இன்று துவங்குகிறது. வரும் 19ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா-2020, டிசம்பர் 15ம் தேதி (இன்று) அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெறுகிறது.
கடந்த 2019ல் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் "ஒத்த செருப்பு" தேர்வு செய்யப்பட்டுள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இயக்குநர் பார்த்திபனுக்கு முதல்வர் நாராயணசாமி இன்று மாலை நடைபெறும் விழாவில் வழங்குகிறார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசும் தரப்படும்.
அதையடுத்து அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் ஒத்த செருப்பு திரைப்படம் திரையிடப்படும். அதைத்தொடர்ந்து வரும் 19ம் தேதி வரை இதே அரங்கில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு இதர மொழித் திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம்.
படங்கள் விவரம்
16ம் தேதி வங்கமொழி திரைப்படம் ஜேஸ்தோபுத்ரா, 17ம் தேதி மலையாளத் திரைப்படம் ஜல்லிக்கட்டு, 18ம் தேதி தெலுங்கு திரைப்படம் எப்2 -பன் அண்டு ப்ரஸ்ட்ரேசன், 19ம் தேதி ஹிந்தி திரைப்படம் உரி-த ஸர்ஜிகல் ஸ்ட்ரைக் திரையிடப்படும்.