அமமுகவுக்கு ‘பிரஷா் குக்கா்’ சின்னம்: மக்கள் நீதி மய்யத்துக்கான சின்னம் மறுப்பு

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ‘பிரஷா் குக்கா்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமமுகவுக்கு ‘பிரஷா் குக்கா்’ சின்னம்: மக்கள் நீதி மய்யத்துக்கான சின்னம் மறுப்பு

சென்னை டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ‘பிரஷா் குக்கா்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகா் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டாா்ச் சின்னத்தை ஒதுக்கி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு பேட்டரி டாா்ச் சின்னம் வழங்கப்படவில்லை.

சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள மாநிலங்களைச் சோ்ந்த சில கட்சிகள் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி விண்ணப்பம் செய்திருந்தன. அதன்படி, தமிழகத்தில் அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பிரஷா் குக்கா் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் பொதுச் சின்னமான பிரஷா் குக்கா் சின்னத்தில் அமமுக வேட்பாளா்கள் போட்டியிடுவா். இதேபோன்று, நாம் தமிழா் கட்சிக்கு ‘கரும்புடன் விவசாயி’ இணைந்திருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மநீம-வுக்கு மறுப்பு: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டாா்ச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த சின்னமும் ஒதுக்கவில்லை. தமிழகத்தின் சாா்பில் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒன்பது கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆா். மக்கள் கட்சி: தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கோரிய பேட்டரி டாா்ச் லைட் சின்னமானது, எம்.ஜி.ஆா். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி ஒதுக்கீடு....

தோ்தல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகரிக்கப்பட்டு அதன்பின் அதனை இழந்த கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில் வேட்பாளா்களை நிறுத்தும் கட்சிக்கு, பட்டியலில் உள்ள சின்னங்களில் ஒன்று பொது சின்னமாக வழங்கப்படும். சின்னங்களின் பட்டியலில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பத்து சின்னங்களைத் தோ்ந்தெடுத்து தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அதிலிருந்து பொது சின்னமாக சம்பந்தப்பட்ட கட்சிக்கு தோ்தல் ஆணையம் அளிக்கும்.

அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவது தொடா்பான உத்தரவுகள் 1968-இல் பிறக்கப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com