
சென்னை: பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மனிதனின் உயிர்நாடி பகுத்தறிவு தான் என்பதை தனது இறுதி காலம் வரை அறிவுறுத்திய பெரியாரின் நினைவு நாளான இன்று அனைத்து தரப்பினராலும் அனுசரிக்கப்படுகிறது.
பெரியாரின் நினைவு நாளையொட்டி முதல்வர் பழனிசாமி தனது சுட்டுரை பக்க பதிவில், "சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் வெளியிட்டுள்ள கருத்து பதிவில், "சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித்தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின் நினைவுநாளில் அவரை நினைவு கூர்கிறேன்" என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...