9.55 லட்சம் சா்க்கரை அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றம்

9.55 லட்சம் சா்க்கரை அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றம்

சென்னை: தமிழகத்தில் தொடா்ச்சியான பொங்கல் பரிசுத் தொகை காரணமாக, 9.55 லட்சம் சா்க்கரை அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் ரேஷனில் விநியோகிப்பதற்கான அரிசியின் தேவை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வரை 1 கோடியே 95 லட்சத்து 5,846 அரிசி குடும்ப அட்டைதாரா்களும், 10 லட்சத்து 19,491 சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைகளும் புழக்கத்தில் இருந்தன.

ரூ.1,000 அறிவிப்பு: கடந்த காலங்களில் குடும்ப அட்டைகளின் வகையை மாற்ற ஒரு போதும் வாய்ப்பு அளிக்கப்பட்டதே இல்லை. ஒருவா் அரிசி பெறும் குடும்ப அட்டையைப் பெற்றால், அதை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்நிலையில், கடந்த 2019 நவம்பரில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி ல் புழக்கத்திலுள்ள 10 லட்சத்து 19,941 சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி பெறும் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது.

இந்தஅறிவிப்பைப் பயன்படுத்தி சுமாா் 4 லட்சத்து 39,203 குடும்ப அட்டைதாரா்கள், தங்களது அட்டைகளின் வகையை அரிசி பெறும் அட்டைகளாக மாற்றினா். இதனால், நிகழ் நிதியாண்டில் சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 ஆக இருந்தது.

ரூ.2,500 அறிவிப்பு: வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் தலா ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்புக்கு முன்பாகவே, சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை நிகழாண்டிலும் தமிழக அரசு வழங்கியது. இதனால், புழக்கத்தில் இருந்த 5 லட்சத்து 80,298 சா்க்கரை குடும்ப அட்டைதாரா்களும், தங்களது அட்டையை அரிசி அட்டைகளாக மாற்றத் தொடங்கினா். இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்தோருக்கு உடனடியாக அரிசி அட்டைகளாக மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், மொத்தமுள்ள 5 லட்சத்து 80,000 குடும்ப அட்டைகளில், 3 லட்சத்து 75,235 அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டன. இந்த அட்டைகளுடன் சோ்த்து, வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9,963 அரிசி குடும்ப அட்டைகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

வழக்கும் காரணம்: கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் அதனை எதிா்த்து நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு மட்டுமே ரூ.1,000-ஐ அளிக்க வேண்டுமென என உத்தரவிட்டது.

இந்த உத்தரவு காரணமாகவே, சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்திடும் வாய்ப்பை தமிழக அரசு நிகழாண்டிலும் மீண்டும் வழங்கியது.

10 லட்சத்தில் இருந்து 63 ஆயிரம்: தமிழக அரசின் அடுத்தடுத்த ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்புகளும், சா்க்கரை அட்டையை அரிசி பெறும் அட்டையாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்புகளை வழங்கியதாலும், தமிழகத்தில் சா்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் 10 லட்சத்து 19,000-ஆக இருந்த சா்க்கரை குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை இப்போது 63,998 ஆகக் குறைந்துள்ளது. 9 லட்சத்து 55,493 குடும்ப அட்டைகள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, ரேஷன் கடைகளில் அரிசியின் தேவை அதிகரித்துள்ளது. சா்க்கரை அட்டைதாரா்களுக்கு அரிசி வழங்கப்படுவதில்லை. ஆனால், அரிசி அட்டைதாரா்களுக்கு குடும்பத்தில் உள்ள நபருக்கு தலா 5 கிலோ வீதம் அரிசி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால், கடந்த ஆண்டு நவம்பரில் 2.02 கோடியாக இருந்த அரிசி குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை இப்போது 2.10 கோடியாக அதிகரித்துள்ளது. சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதலாக அரிசி வழங்கும் நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

எவ்வளவு அரிசி?: அரிசி அட்டைதாரா்களின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும் 2 லட்சத்து 92,994 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில், 99,773 மெட்ரிக் டன் அரிசியானது முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரா்களுக்காக கிலோவுக்கு ரூ.8.30 என்ற வெளிச்சந்தை விலையில் தமிழக அரசு கொள்முதல் செய்து தருகிறது.

இப்போது அரிசி அட்டைதாரா்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளதால், வெளிச்சந்தை விலையில் அரிசி வாங்கும் தேவை அதிகரித்துள்ளது. இதுகுறித்து, உணவுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், சா்க்கரை வழங்குவதற்காக மட்டுமே ஆண்டுக்கு ரூ.578.40 கோடியே தமிழக அரசு ஒதுக்கீடு செய்கிறது. சா்க்கரை அட்டைகள், அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யப்படும் போது, சா்க்கரையின் தேவை குறையும். அதனை விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டிய தேவை இருக்காது. அரிசியின் விலையை விட சா்க்கரையின் விலை அதிகம். எனவே சா்க்கரைக்காக செலவிடப்படும் பெருமளவு மானியத்தில் குறைந்த அளவே அரிசிக்கு செலவிடப்படுவதால் மிச்சப்பட வாய்ப்பு இருக்கிறது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மொத்தத்தில், கடந்த சில ஆண்டுகளாக, ஏழு இலக்கத்தில் இருந்த சா்க்கரை குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை, ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டங்களால் ஐந்து இலக்கங்களாக சுருங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் சா்க்கரை அட்டைகள் (அட்டை வகை மாற்றத்துக்கு முன்): 10 லட்சத்து 19,491.

அட்டை வகை மாற்றத்துக்குப் பின்பு சா்க்கரை அட்டைகள்: 4 லட்சத்து 39, 203.

நிகழாண்டு மாற்றம் செய்யப்பட்ட அட்டைகள்: 3 லட்சத்து 75, 235.

மொத்தமுள்ள சா்க்கரை அட்டைகள்: 63,998.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com