மயிலாடுதுறை மாவட்டம் உதயமானது

தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் உதயமானது

தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய மயிலாடுதுறை புதிய மாவட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா். தொடா்ந்து, ஏப்ரல் 7-ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க சிறப்பு அலுவலராக இரா. லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஆகியோா் நியமிக்கப்பட்டு, எல்லை வரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. எல்லை வரையறைப் பணிகள் நிறைவுற்றதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் தெற்குவீதியில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் தற்காலிக மாவட்ட ஆட்சியரகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக உதயமாகும் மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திரரெட்டி, இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை ஆணையர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த புதிய மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயமும், மீன்பிடி தொழிலும் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1172 சதுர கிலோ மீட்டர்கள். இதில் விவசாயம் 1,65,550 ஏக்கர் சாகுபடி பரப்பில் நடைபெறுகிறது. மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 9 லட்சத்து 18 ஆயிரத்து 356 ஆகும். மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை  மாவட்டத்தில் சீர்காழி தாலுகா சீர்காழி கோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்களும், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளும், மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், செம்பனார் கோயில், குத்தாலம் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களும், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய 2 நகராட்சிகளும், வைத்தீஸ்வரன் கோவில், மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு பேரூராட்சிகளும் அமைந்துள்ளன. மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் தலைமை இடமாகவும் திகழ்கிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழையார், திருமுல்லை வாசல், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட 26 மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் மீன் ஏற்றுமதி நடைபெறுகிறது. இங்கு பூம்புகார், தரங்கம்பாடி ஆகிய புராதன சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன. மேலும் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் நிறைந்த ஆன்மீக மாவட்டமாகவும் திகழ்கிறது. சட்டம் ஒழுங்கை  நிர்வகிக்க 2 டிஎஸ்பிகளுக்குக் கீழ் 14 காவல் நிலையங்கள், இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட உருவாக்க அலுவலர் லலிதா காலை 10.30மணி அளவில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதைதொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள சீர்காழி தாலுகாவில் இருந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகத்துக்கு செல்ல 70 கி.மீட்டர் தொலைவு இருப்பதால், ஒருநாள் முழுவதும் வீணாகும் நிலை இருந்தது. புதிய மாவட்டம் அமைந்துள்ள நிலையில் உடனடியாக சென்றுவர வசதியாக இருக்கும் என்பதால் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com