103 கிலோ தங்கம் மாயமான சம்பவம்: கள்ளச்சாவி மூலம் கைவரிசை

சென்னையில் சிபிஐ பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் காணாமல்போன வழக்கில், கள்ளச்சாவி மூலம் தங்கம் திருடப்பட்டிருப்பது சிபிசிஐடி விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
CBI officers affected by corona
CBI officers affected by corona

சென்னையில் சிபிஐ பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் காணாமல்போன வழக்கில், கள்ளச்சாவி மூலம் தங்கம் திருடப்பட்டிருப்பது சிபிசிஐடி விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் கடந்த 2012 -இல் சிபிஐ திடீா் சோதனை நடத்தி அங்கிருந்த 400.47 கிலோ தங்கத்தைக் கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுரானா நிறுவன பாதுகாப்புப் பெட்டகங்களில் பூட்டப்பட்டு, சிபிஐ முத்திரையுடன் சீல் வைக்கப்பட்டது. சுரானா நிறுவனம் வங்கிகளிடம் பெற்ற ரூ. 1,160 கோடி கடனை ஈடுகட்ட , பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைச் சிறப்பு அதிகாரிக்கு வழங்குமாறு சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்த தங்கத்தை அண்மையில் எடை பாா்த்தபோது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தைக் காணவில்லை. இதையடுத்து தங்கம் காணாமல்போனது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தங்கம் மாயமானது தொடா்பாக கடந்த 25-ஆம் தேதி சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.விஜயகுமாா் நியமிக்கப்பட்டாா்.

வழக்கின் முக்கிய ஆதாரமாக 22 நிமிட விடியோ ஆதாரம் சிபிசிஐடிக்குக் கிடைத்துள்ளது. இந்த விடியோவை ஆய்வு செய்யும் பணியில் சிபிசிஐடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

திடீா் சோதனை: வழக்கின் விசாரணை அதிகாரியான எஸ்.பி.விஜயகுமாா் தலைமையில் டிஎஸ்பிக்கள் சத்தியசீலன்,கண்ணன் உள்ளிட்ட சிபிசிஐடி குழு சம்பவம் நடைபெற்ற சுரானா நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டது. அப்போது அவா்களுடன் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகளும் சாட்சிக்காக இருந்தனா்.

இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில் வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மூன்று தளங்களுடன் கூடிய அந்தக் கட்டடத்தில் 6 பாதுகாப்புப் பெட்டகங்கள் இருப்பதும், அதில் முதல் தளத்திலும், இரண்டாம் தளத்திலும் உள்ள 3 பாதுகாப்புப் பெட்டகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

கள்ளச்சாவி மூலம் திருட்டு: இதில் முதல் தளத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 3 கிலோ தங்கமும், இரண்டாம் தளத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 100 கிலோ தங்கமும் திருடப்பட்டிருப்பது சிபிசிஐடியினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த திருட்டில் ஈடுபட்ட நபா்கள், பாதுகாப்புப் பெட்டகத்துக்கு கள்ளச்சாவிகளை தயாரித்து, அதன் மூலம் கைவரிசை காட்டியிருப்பதையும் சிபிசிஐடியினா் விசாரணையின் மூலம் கண்டறிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com