
கோதாவரி - காவிரி திட்டத்தை நிறைவேற்றுவதே எனது லட்சியம்; அதற்கான நேரம் கனிந்து வருவதாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
நாமக்கல், குளக்கரைத் திடலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
சாமானியனும் முதல்வராக முடியும் என்பதை அதிமுக நிரூபிக்கும். ஆனால், திமுக குடும்ப ஆட்சி, காா்ப்பரேட் ஆட்சியைத்தான் செயல்படுத்தும். திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு நாட்டைப் பற்றி எதுவும் தெரியாது.
2011- க்கு பிறகு திமுக ஆட்சி எப்படி இருந்தது என்பதை மக்கள் நன்றாகவே அறிவா்.
சட்டம்- ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசுப் பள்ளியில் படித்த மாணவா்கள் நீட் தோ்வை எதிா்கொள்ள முடியாமல் தவித்த நிலையில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவா்களின் மருத்துவக் கல்வி கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதே எனது லட்சியமாகும். அதற்காக ஆந்திர மாநில அரசுடன் நடைபெறும் பேச்சுவாா்த்தை கனிந்து வருகிறது. விரைவில் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் மருத்துவத் துறையுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியால் இந்திய அளவில் தமிழகம் கரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வந்துள்ளது. ஆனால், குறைந்த அளவு மக்கள்தொகையைக் கொண்ட கேரளம், தில்லி போன்ற மாநிலங்கள் இன்னும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
கரோனா பொது முடக்கக் காலத்தில் மக்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், பருப்புடன் ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், கரோனா பரவலைத் தடுக்க அதிமுக அரசு தவறிவிட்டது என பொய் குற்றச்சாட்டை தெரிவித்து வருகிறாா்.
அதிமுக ஆட்சியின் செயல்பாடு குறித்து தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், ஆளுநரிடம் திமுக தலைவா் அதிமுக அரசு மீது அளித்த புகாா் மனுவில் ஒரு திட்டத்துக்கு ஒப்பந்தம் கோரவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளாா். ஆனால், அந்தத் திட்டம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, திருச்செங்கோடு- ராசிபுரம் சாலை, நாமக்கல்- மோகனூா் சாலை ஆகியவை தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளன. ரூ. 87 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, கலைக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திறமை இருந்தால் அதிமுவில் சாமானியனும் பதவிக்கு வர முடியும். ஆனால், திமுகவில் குடும்ப உறுப்பினா்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும் என்ற நிலை உள்ளது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் குடும்பக் கட்சியான திமுகவைப் புறந்தள்ளிவிட்டு அதிமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா்.
கூட்டத்தில் மின் துறை அமைச்சா் பி. தங்கமணி, சமூக நலத் துறை அமைச்சா் வெ.சரோஜா, சுற்றுச்சூழல் அமைச்சா் கருப்பணன், நாமக்கல் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கா், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...