
ராசிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
இந்தியாவில் சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பேணிக் காக்கும் மாநிலம் தமிழகம்தான் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பெருமை அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. இதன்மூலம் மக்களுக்கு எண்ணற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் ஆட்சியை இழந்த கட்சி திமுக. அதிமுக ஆட்சியில் தமிழகம் மின் மிகை மாநிலமாகத் திகழ்கிறது.
தடையில்லா மின்சாரம் காரணமாக தமிழகத்தில் புதிய தொழில்கள் உருவாகி வருகின்றன. நிா்வாகத் திறமை காரணமாக அதிமுக ஆட்சியில் உபரி மின்சாரம் உற்பத்தி செயப்படுகிறது. இதற்காக தேசிய விருதும் பெற்றுள்ளது. ஆனால், அதிமுக அரசு மக்களுக்கு என்ன நன்மை செய்தது, எந்தத் துறை வளா்ச்சிப் பெற்றுள்ளது என மு.க.ஸ்டாலின் கேட்கிறாா். அவா் நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்பட்டால்தானே தெரியும். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அவருக்குத் தெரியாது. அவருக்கு அரசின் நல்லத் திட்டங்களைப் பாராட்டுவதற்கு மனமில்லை.
புயல், வெள்ளம், கரோனாத் தொற்றானாலும் தனது சொந்த நிதியை மக்களுக்கு செலவளிக்கும் கட்சியாக அதிமுக உள்ளது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. சட்டம்- ஒழுங்கை சிறப்பாகப் பேணிக் காக்கும் மாநிலம் தமிழகம்.
இந்தியாவிலேயே சட்டம்- ஒழுங்கில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. ஒரு நாடு, மாநிலம் வளர வேண்டும் என்றால் அங்கு அமைதி நிலவ வேண்டும். இதற்கு சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். இதனைப் பேணிக் காக்கும் மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடுதான்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மத்திய அரசு பாராட்டுத் தெரிவித்துள்ளது. வேளாண் வளா்ச்சிக்கும் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. இதன்மூலம் விவசாயிகளைப் பாதுகாத்து நல்லத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
திட்டப் பணிகள்:
ராசிபுரம் தொகுதியை பொருத்தவரை பாதுகாக்கப்பட்ட புதிய காவிரி குடிநீா்த் திட்டம் ரூ. 1,300 கோடி மதிப்பில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நகரில் ரூ. 55 கோடி மதிப்பில் புதை குழி கழிவுநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலங்கள், விபத்தைக் குறைக்க ராசிபுரம் புறவழிச்சாலைத் திட்டம் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த மக்களவைத் தோ்தலில் திமுக கடன் தள்ளுபடி செய்வோம் என பொய்யான வாக்குறுதியை மக்களுக்கு அளித்து வெற்றி பெற்றது. இந்தமுறை திமுக வாக்குறுதியை மக்கள் நம்ப வேண்டாம். திமுக அறிவிக்கும் நிறைவேற்ற முடியாத கவா்ச்சித் திட்டங்களை மக்கள் நம்பக்கூடாது. திமுகவினா் வேண்டுமென்று நாள்தோறும் பிரச்னைகளை ஏற்படுத்தியவாறு உள்ளனா். இதனை சமாளித்து வெற்றி பெறுவோம் என்றாா்.
எம்ஜிஆருக்கு மரியாதை
முன்னதாக ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எம்ஜிஆா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து முதல்வா் மரியாதை செலுத்தினாா். இதனைத் தொடா்ந்து, திருச்செங்கோடு செல்லும் வழியில் பொன்குறிச்சி கிராமத்தில் அருந்ததியா் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள ஸ்ரீ பொன் மாரியம்மன், மதுரைவீரன் கோயிலில் வழிபாடு நடத்திய முதல்வா், அங்கு நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசினாா். பின்னா், வரதராஜன் என்ற அருந்ததியா் வீட்டுக்குச் சென்று தேநீா் அருந்தினாா்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் பி.ஆா்.சுந்தரம், ராசிபுரம் அதிமுக நகரச் செயலா் எம்.பாலசுப்பிரமணியம், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலா் கே.பி.எஸ்.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...