20 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் 60 ஆண்டுக் கால திரையரங்கம்

கண்ணதாசன் தலைமையில் சிவாஜி கணேசன் திறந்து வைத்த வாழப்பாடி  திரையரங்கம் 60 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. 
60 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாய் காட்சியளிக்கும் வாழப்பாடி ராஜா திரையரங்கம்.
60 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாய் காட்சியளிக்கும் வாழப்பாடி ராஜா திரையரங்கம்.
Updated on
2 min read

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், கவிஞர் கண்ணதாசன் தலைமையில், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் திறந்து வைத்த ராஜா திரையரங்கம், வரலாற்று சின்னமாய் இன்றளவிலும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. 60 ஆண்டுகள் கடந்து வைர விழா கண்ட இத்திரையரங்கத்தைப் புதுப்பித்து மீண்டும் திரையிட வேண்டுமன ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

60 ஆண்டுகளுக்கு முன், திரைப்படங்களே மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக விளங்கிய காலகட்டத்தில், வாழப்பாடியில் தொழிலதிபர்கள், வெங்கடாஜல படையாட்சி, ஆறுமுகம் கவுண்டர், சுப்பராய உடையார், துரைராஜ் நாய்க்கர் ஆகியோரது கூட்டுமுயற்சியில் 1961ம் ஆண்டு ராஜா என்ற பெயரில், வாழப்பாடி- கடலூர் சாலையில் திரையரங்கம் அமைக்கப்பட்டது. இத்திரையரங்கத்தை கவிஞர் கண்ணதாசன் தலைமையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்துவைத்தார்.

முதன்முதலாக பாலும் பழமும் என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் அதிநவீன ஒலி ஒளி கருவிகள் பொருத்தப்பட்டு மிக நேர்த்தியாகத் திரையரங்கம் வடிவமைக்கப்பட்டு இருந்ததால், உள்ளூர் பகுதியைச் சார்ந்த ரசிகர்கள் மட்டுமின்றி, சேலம் ஆத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த ரசிகர்களும், வாழப்பாடி ராஜா திரையரங்கிற்குச் சென்று திரைப்படத்தை பார்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். 

சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ராஜா திரையரங்கத்தில், நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. நடிகர் திலகம் சிவாஜிகணேசன், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படமான, 'கூண்டுக்கிளி' வாழப்பாடி ராஜா திரையரங்கில் திரையிட்ட போது சிவாஜி ரசிகர்களுக்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்திரையரங்கில் பணமா? பாசமா? என்ற திரைப்படம் தொடர்ந்து 48 நாள்கள் திரையிடப்பட்டு ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. தமிழகத் திரைப்படத்துறை வரலாற்றில், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு ஒரு அங்கம் வகித்த ராஜா திரையரங்கம், பல்வேறு காரணங்களினால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் மூடிக் கிடக்கிறது. இருப்பினும் இன்றளவிலும் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

1961ல் அச்சிடப்பட்ட திரையரங்க திறப்புவிழா அழைப்பிதழ்.
1961ல் அச்சிடப்பட்ட திரையரங்க திறப்புவிழா அழைப்பிதழ்.

இத்திரையரங்கத்தில் பல்வேறு திரைப்படங்களைப் பார்த்து ரசித்து மகிழ்ந்த ஏராளமான ரசிகர்களிடையே,  இத்திரையரங்கத்தைப் புதுப்பித்து மீண்டும் திரையிட வேண்டுமென எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக திரைப்படத் துறைக்கு முன்னோடியாக விளங்கிய சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகம், குடியிருப்பு பகுதிகளாக மாறியதைப் போல,  வாழப்பாடி ராஜா திரையரங்கமும் வரும் காலங்களில் குடியிருப்பு 
பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த திரையரங்கில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்து மகிழ்ந்த ரசிகர்கள், இன்றளவிலும் இவ்வழியாகச் செல்லும் போது, திரையரங்கை நின்று பார்த்து மலரும் நினைவுகளை அசைபோட்டு மகிழ்ந்து செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com