மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்து மக்களை பயமுறுத்துகிறது: கொ.ம.தே.க ஈஸ்வரன் பேட்டி

நாட்டில் பல்வேறு பிரச்னைகள் இருக்க மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து மக்களை பயமுறுத்துகிறது என்று  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்து மக்களை பயமுறுத்துகிறது: கொ.ம.தே.க ஈஸ்வரன் பேட்டி

நாட்டில் பல்வேறு பிரச்னைகள் இருக்க மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து மக்களை பயமுறுத்துகிறது என்று  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் குடியுரிமைத்  திருத்தச் சட்டத்தை கண்டித்து பொதுமக்களிடம் இருந்து கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடந்தது.  

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  நாட்டை ஆளும் கட்சி, ஏதோ எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள் என்று கூறி வருகிறார்கள். அதை பொய்யாக்கும் வகையில் இன்று ஒரு கோடி மக்கள் பங்கேற்கும் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இன்று பொருளாதார நிலை சீரழிந்து போயுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. ஏராளமான இளைஞர்கள் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் ஆளும் கட்சி குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது.  இப்படித்தான்  பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று கூறி நாட்டில் 5 ஆயிரம் பேர் வைத்திருந்த கருப்பு பணத்திற்காக 130 கோடி மக்களை துன்புறுத்தினார்கள்.  அதேபோன்று ஒருசில இடங்களில்  தீவிரவாதிகள் இருக்கலாம். அதற்காக குடியுரிமைத் திருத்தச்  சட்டத்தை கொண்டு வந்து 131 கோடி மக்களை துன்புறுத்தி வருகிறார்கள் .

நேற்றைய தினம் ஆளும் கட்சி சார்பில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்தப் பட்ஜெட் நிறைவு தராத ஒரு பட்ஜெட் ஆகும். இதில் தொழில் முன்னேற்றத்திற்காக எந்த ஒரு முயற்சியும் வேலைவாய்ப்பை உருவாக்க எந்த ஒரு முயற்சியும் இடம்பெறவில்லை.  

இந்திய மக்கள் சேமிக்கும் எண்ணம் தான் இந்தியா பொருளாதாரத்தை இதுவரை காப்பாற்றிக் கொண்டு வந்தது. இந்த பட்ஜெட்டில் சேமிப்புக்கு வரி ஊக்கம் கிடையாது. இந்த அரசு ரயில்வே தனியார் மயமாக்குதல், ஏர் இந்தியாவை  விற்க முயற்சி என இப்படியாக 10 பொதுத்துறை நிறுவனங்களை விற்க முயற்சி செய்து வருகிறது . கடைசியில்  எல்.ஐ.சி.யையும் இந்த அரசு தனியாருக்கு  தாரைவார்க்க தயாராகி வருகிறது.

 நாட்டில் இவ்வாறு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க  மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து மக்களை பயமுறுத்துகிறார்கள். எனவே, அதைப் பொய்யாக்கும் வகையில் தான் இன்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.  

பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டு வருகிறார். ஆனால், இங்கு ராமதாஸ் குடியுரிமைச் சட்டத்தால் பிரச்னை ஏற்படும் என்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com