தலைமை மாற்றமும்... தலைமுறை மாற்றமும்...

மாறிவிட்டிருக்கும் தமிழக அரசியல், சமூக சூழலுக்கு ஏற்ப திமுகவும் தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டிருப்பதன் அடையாளமாகத்தான் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற
தலைமை மாற்றமும்... தலைமுறை மாற்றமும்...

மாறிவிட்டிருக்கும் தமிழக அரசியல், சமூக சூழலுக்கு ஏற்ப திமுகவும் தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டிருப்பதன் அடையாளமாகத்தான் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டை அணுக வேண்டும். மாநாடு மங்கள இசையுடன், குத்துவிளக்கேற்றி தொடங்கப்பட்டது.
 இறைமறுப்பு, பிராமண எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, தேசிய எதிர்ப்பு (இந்தியா சுதந்திரம் பெற்றதைத் "துக்க நாளாக' அறிவித்தார் ஈ.வெ.ரா. அண்ணா அதை ஏற்றுக் கொள்ளவில்லை) என்று கொள்கை ரீதியிலான இயக்கமாக இருந்தது திராவிடர் கழகம். அதிலிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற அரசியல் இயக்கத்தை அண்ணா தொடங்கினார்.
 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17-இல் இறைமறுப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) உருவானது. இறைமறுப்பு, பகுத்தறிவு, சமூகநீதி ஆகியவற்றின் அடைப்படையில் அமைந்தது திமுக-வின் வரலாறு.
 திமுக வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 10 மாநில மாநாடுகளில் 5 மாநாடுகள் திருச்சியில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாது தேர்தல் பரப்புரை, தேர்தல் வெற்றி, கூட்டணி கட்சிகள் சேருதல் என பல்வேறு நிகழ்வுகளையும் திருச்சியிலேயே மாநாடு போல நடத்தி திருப்பத்தைக் கண்டது திமுக.
 திருச்சியென்றாலே திமுக-வுக்கு பல்வேறு திருப்புமுனைகளை அளித்தது என மறைந்த முதல்வர் கருணாநிதியும், இப்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் திருச்சியில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தவறாமல் கூறுவது வழக்கம். "தீரர்கள் கோட்டம் திருச்சி' என்ற புத்தகமே இதற்குச் சான்று. முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி முதன்முதலில் பேரவைத் தேர்தல் களம் கண்ட தொகுதி குளித்தலை (ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம்) என்பதும் குறிப்பிடத்தக்கது.
 இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சில் திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு, திருச்சி - மணப்பாறை சாலையில் கேர் கல்வி நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்கமாக மாநாடுகள் நடைபெறும்போது மாநாட்டில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்வு, கொள்கைகளை விளக்கும் பாடல்கள், அரசியல் சொற்பொழிவு, தலைவர்களின் எழுச்சி உரை, தீர்மானங்கள் ஆகியவை தவறாமல் இடம்பெறும். இந்த மாநாட்டில் இதுவரை நடைபெற்ற திமுக மாநாடுகளில் இல்லாத இரண்டு மாற்றங்கள் காணப்படுகின்றன.
 முதல் திருப்பம்: மாநாட்டின் தொடக்கமாக மேடையில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடந்தது முதல் திருப்பம். மங்கள இசையும் ஒலித்தது. இறைமறுப்பு, பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட திராவிட கழகக் கொள்கைகளில் சில அடிப்படையான அம்சம் திமுகவிலும் பின்பற்றப்பட்டு வந்தன. அதனால், இந்து மதத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் மங்கள இசையும், குத்துவிளக்கு ஏற்றுவது போன்ற சம்பிரதாயங்களும் திமுகவில் பின்பற்றப்படுவதில்லை.
 மங்கள இசையுடன், குத்துவிளக்கு ஏற்றி திமுக மாநாடு தொடங்கப்பட்டது, இறைமறுப்புக் கொள்கையுடைய தொண்டர்களை வியப்படையச் செய்தது. இளைய தலைமுறை திமுக தொண்டர்களும், நாத்திகக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத அரசியல் ரீதியிலான திமுக தொண்டர்களும் இந்த மாற்றத்தை வரவேற்றிருக்கக் கூடும். ஆனால், இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரிதும் விவாதத்துக்கு வித்திட்டுள்ளது. திமுக-வுடன் தொடர்ந்து தோழமையாக இயங்கி வரும் பெரியாரிய இயக்கங்கள், இதனால் ஆத்திரம் அடைந்துள்ளன.
 திமுக மாநாட்டில் குத்துவிளக்கேற்றிய நிகழ்வு குறித்த தங்களது அதிருப்தியை நேரடியாகவும், மறைமுகமாகவும் திக ஆதரவாளர்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். "கருணாநிதி தலைவராக இருந்தவரை மாநாடுகளில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டதா? இது, என்ன புதுப் பழக்கம்?' எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
 ""அரசியலில் சில எதார்த்த உண்மைகளை நாம் புரிந்துகொண்டு காலத்துக்கேற்ப மாறியாக வேண்டும். அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த சூழல் இப்போது இல்லை. வெளியூர்களிலிருந்து மாநாட்டுக்குத் திருச்சி வந்திருந்த தொண்டர்களில் 90% பேர் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும். தீவிர இறைமறுப்புக் கொள்கையை இனியும் கடைப்பிடித்தால், திமுகவும் திராவிடர் கழகமாகச் சுறுங்கிவிடும் என்பதைத் தலைவர் ஸ்டாலின் புரிந்து கொண்டிருக்கிறார். இது வரவேற்கத்தக்க மாற்றம்'' என்றார் மாநாட்டுக்கு வந்திருந்த ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஒருவர்.
 ""கேரள மாநிலத்திலுள்ள கிறிஸ்தவர்களின் மாதா கோயில்களில், நமது கோயில்களைப்போல கொடி மரங்கள் காணப்படுகின்றன. நமது பண்டிகை தினங்களை கிறிஸ்தவர்களும் வேறு பெயரில் கொண்டாடுகிறார்கள். "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்' என்று அவர்கள் புரிந்து கொண்டிருப்பதைப்போல நாமும் புரிந்து கொண்டால்தான் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியும். மங்கள இசையும், குத்துவிளக்கு ஏற்றுவதும் தமிழர் பண்பாடு என்பதை நாம் அங்கீகரித்தாக வேண்டும். தலைவர் கொண்டு வந்திருக்கும் காலத்திற்கேற்ற மாற்றம் இது'' என்றார் மூத்தத் தலைவர் ஒருவர்.
 திமுக மாநாடு என்றாலே வழக்கமாக அரசியல் வீச்சு அனல் பறக்கும். அடிமட்டத் தொண்டன் தொடங்கி தலைமை நிர்வாகிகள் வரை பலரும் அரசியல் உரை நிகழ்த்துவார்கள். அதற்கு மகுடம் சூட்டுவதைப் போன்று கட்சித் தலைவர் உரை இடம் பெறும். ஆனால், திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் அரசியலே பேசப்படவில்லை என்ற நிலைதான் காணப்பட்டது. இது இரண்டாம் திருப்பம்.
 திருச்சி மாநாட்டில் எள்முனை அளவுக்கு கூட அரசியல் பேசப்படவில்லை. மாநாட்டில் பேசிய தலைமைக் கழக நிர்வாகிகளாக இருந்தாலும், வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர்களாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மற்றும் உள்ளாட்சிப் பணிகளை மட்டுமே குறிப்பிட்டுப் பேசினர்.
 அதிரடி அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தும் திமுக பொருளாளர் துரைமுருகனும் கூட, கருணாநிதியின் செயல்பாடுகளையும், மு.க.ஸ்டாலின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு மட்டுமே பேசினார்.
 தலைமையுரை ஆற்றிய மு.க.ஸ்டாலினும், அதிமுக, பாஜக குறித்தோ, மத்திய, மாநில அரசுகளின் அரசியல் செயல்பாடுகள் குறித்தோ, கொள்கை அரசியல் குறித்தோ குறிப்பிடவில்லை. உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான செயல்பாடுகள் குறித்த அறிவுரைகளை மட்டுமே வழங்கினார்.
 அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் கட்சி என்கிற தன்னம்பிக்கையுடன், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடாக திருச்சி மாநாடு அமைந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல் மாநாடாகத்தான் திமுக தலைமை அதை ஏற்பாடு செய்திருந்தது.
 "மக்களுக்கும், கிராமத்தின் வளர்ச்சிக்கும் மக்களோடு மக்களாக இருந்து நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும். கிராம சபைக் கூட்டங்களை நடத்தி இளைஞர்கள், பெண்கள், ஊர்த் தலைவர்கள், பெரியோர்களிடம் கருத்து கேட்டு பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வு காண வேண்டும். மக்கள் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டாலே பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும்' என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியது, தொண்டர்கள் மத்தியில் அவரைப் பொறுப்புள்ளஅரசியல் தலைவராக அடையாளம் காட்டியது.
 "சட்டவிரோத செயல்களுக்கு இடைமளித்துவிடக் கூடாது. ஊழலுக்கு இடமளித்துவிடக் கூடாது. முறைகேடுகளுக்குத் துணை போகக் கூடாது' என்றெல்லாம் தலைவர் மு.க. ஸ்டாலின் ஊரக ஊள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகளுக்கு வழங்கிய அறிவுரைகள், அவர் திமுகவை புதியதொரு கோணத்தில் வடிவமைக்க நினைப்பதை எடுத்தியம்புவதாக, உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான இளைஞர்களில் ஒருவர் தெரிவித்தார்.
 திமுக தனது முந்தைய இறைமறுப்பு அரசியலுக்கு விடை கொடுத்து ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்கும் முயற்சியாக திருச்சியில் நடந்த திமுக மாநாடு பார்க்கப்படுகிறது.
 கல்வி நிறுவனத்தில் திமுக மாநாடு நடத்துவதை எதிர்த்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அரசியல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என மூத்த திமுக-வினர் சிலர் இதற்குக் காரணம் கூறினார்கள். தலைமை மாற்றமும், தலைமுறை மாற்றமும் திருச்சி திமுக மாநாட்டில் வெளிப்படையாகவே தெரிந்தன!
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com