பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்குச் சிறப்பான ஏற்பாடுகள்: தலைமைச் செயலர் கே. சண்முகம்

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்குச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் கே. சண்முகம் தெரிவித்தார்.
பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்குச் சிறப்பான ஏற்பாடுகள்: தலைமைச் செயலர் கே. சண்முகம்

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்குச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் கே. சண்முகம் தெரிவித்தார்.
 தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களுக்காகச் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
 பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா தொடர்பாக ஏற்கெனவே சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
 அதில் ஆலோசிக்கப்பட்டபடி ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதைப் பார்வையிட்டோம்.
 குறிப்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தோம். பொதுமக்கள் எவ்வித பிரச்னையும் இன்றி உள்ளே வந்து வழிபட்டுவிட்டு வெளியே செல்லும் விதமாகத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
 இதேபோல, மருத்துவ வசதி, குடிநீர், சாப்பாடு போன்ற ஏற்பாடுகளையும் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.
 வாகன நிறுத்தங்கள் எங்கு இருக்க வேண்டும். எந்தவித இடையூறும் இல்லாமல் வாகனங்கள் கொண்டு செல்வது உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோல, பாதுகாப்பு ஏற்பாடும் திருப்திகரமாக இருக்கிறது. பக்தர்களுக்குக் கெடுபிடி இல்லாமல் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 பக்தர்களுக்குச் சூழ்நிலைக்கேற்ப என்னென்ன தேவையோ, அதையெல்லாம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 அதன்படி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரில் பக்தர்களுக்கு உணவு கொடுக்க குறிப்பிட்ட இடங்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது.
 அந்த இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உணவு வழங்கும் இடம் பாதுகாப்பாகவும், மக்களுக்கு வசதியாகவும் இருக்க வேண்டும்.
 யாரும் அனுமதியில்லாமல் உணவு வழங்க முடியாது. அதனால், அனுமதி பெற்றே உணவு வழங்க வேண்டும்.
 சமையல் செய்த உணவைப் பரிசோதித்த பிறகு அனுமதிக்கப்பட்ட இடத்தில் உணவு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு முறைப்படுத்தி வழங்கப்படுவதால், பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை.
 தமிழில் மந்திரங்கள் ஓத 80 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருமுறைப் பாடல்கள், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா போன்றவற்றை அவர்கள் பாடுவர் என்றார் சண்முகம்.
 இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க. பணீந்திர ரெட்டி, பொதுத் துறை முதன்மைச் செயலர் ப. செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர்
 ம. கோவிந்தராவ், தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 முன்னதாக, மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்துவிட்டு, தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், யாகசாலை பணிகள் உள்ளிட்டவற்றை தலைமைச் செயலர் பார்வையிட்டார்.
 "நம்ம தஞ்சை' செயலி உருவாக்கம்
 தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்காக "நம்ம தஞ்சை' என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலர் கே. சண்முகம் அறிமுகம் செய்து வைத்தார்.
 அப்போது அவர் கூறுகையில், பெரியகோயில் குடமுழுக்கையொட்டி "நம்ம தஞ்சை' என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் கோயிலுக்கு எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்றார் அவர். இந்தச் செயலி மூலம் தஞ்சை மாவட்டத்தைப் பற்றியும், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளைப் பற்றியும், மக்களுக்கு அரசு வழங்கும் பிற சேவைகள் பற்றியும் அறிந்தகொள்ள முடியும். அத்துடன் பெரிய கோயில் வரலாறு, கட்டட அமைப்பு, அதனுள் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள், கல்வெட்டுகள் பற்றியும் அறியலாம். ப்ளே ஸ்டோரில் பகிரப்பட்டுள்ள "நம்ம தஞ்சை' செயலியை பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கிப் பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com