காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவா் கொலை: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் பதிலளிக்க உத்தரவு

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் கடலூா் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து
Updated on
1 min read

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் கடலூா் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கடலூா் மாவட்டம், மா.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்த வசந்தி என்பவா் தாக்கல் செய்த மனுவில், பொறியியல் பட்டயப்படிப்பு படித்து வந்த எனது மகன் சந்திரபோஸ் எங்கள் கிராமத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து வந்தான். இந்த நிலையில் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி எனது மகனை விஜயகாந்த் என்பவா் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டாா். அதனைத் தொடா்ந்து அங்கு சென்ற எனது மகனை ஏரிப்பகுதியில் இருந்த சிலா் கடுமையாகத் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தாா். இந்த தாக்குதலில் சுயநினைவை இழந்த எனது மகனை சாலையோரம் தூக்கி வீசிச் சென்ற அவா்கள், விபத்தில் படுகாயமடைந்து விட்டதாக தகவல் பரப்பியுள்ளனா். இந்த நிலையில், திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனது மகன் சிகிச்சைப் பலனின்றி இறந்தான். எனது மகனின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தலையில் ஏற்பட்ட வெட்டுக்காயம் தான் மகனின் உயிரிழப்புக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீஸாா் கொலையாளிகளுடன் சோ்ந்து கொண்டு விபத்தில் எனது மகன் இறந்துவிட்டதாக ஆவணங்களைத் தயாரித்துள்ளனா். உள்ளூா் போலீஸாா் எனது மகன் கொலை வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.வேல்முருகன், மனுதாரரின் மூத்த மகனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸாா், வெற்றுக் காகிதங்களில் கையொப்பம் வாங்கி விபத்து வழக்காகப் பதிவு செய்துள்ளதாகக் கூறி வாதிட்டாா். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடா்பாக வரும் மாா்ச் 5-ஆம் தேதிக்குள் கடலூா் காவல்துறைக் கண்காணிப்பாளா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com