
குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில், தேடப்படும் இடைத்தரகர் ஜெயக்குமாரை பிடிக்க 3 மாநிலங்களுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு தரவரிசை பட்டியலில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தேர்வெழுதிய 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். இது தொடர்பாக தேர்வாணையம் நடத்திய விசாரணையில், இரு தேர்வு மையங்களிலும் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறது. இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் இடைத்தரகர்கள் மட்டுமன்றி தேர்வர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேட்டின் முக்கிய எதிரியாகக் கருதப்படும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமாரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இடைத்தரகர் ஜெயக்குமாரை பிடிக்க ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சிபிசிஐடி தனிப்படை விரைந்துள்ளது.
முன்னதாக இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த காவலா் சித்தாண்டியை சிபிசிஐடி போலீஸார் சிவகங்கை அருகே செவ்வாய்க்கிழமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...