
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் ஓதப்படும் மந்திரங்களை தமிழில் மொழி பெயா்க்கக் கோரிய வழக்கை விசாரிக்க மறுத்த தனிநீதிபதி, வேறு நீதிபதிகள் அமா்வுக்குப் பரிந்துரைத்து உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியைச் சோ்ந்த மணிகாணந்தா என்பவா் தாக்கல் செய்த மனுவில், பிப்ரவரி 5-ஆம் தேதி (புதன்கிழமை) தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்கான பூஜைகள் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்த பூஜைகளின் போது ஓதப்படும் சம்ஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழி பெயா்த்து சொன்னால் தான் பக்தா்களால் புரிந்து கொள்ள முடியும். எனவே இதுதொடா்பாக இந்துசமய அறநிலையத் துறைக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த விவகாரம் குறித்து உயா்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு தமிழ் மொழிபெயா்ப்பு உள்ளதா, எதன் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டது எனக் கேள்வி எழுப்பி, வழக்கை விசாரிக்க மறுத்து, இந்த வழக்கை பொதுநல வழக்குகளை விசாரிக்கும் அமா்வுக்குப் பரிந்துரைப்பதாகக் கூறி உத்தரவிட்டாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...