ரூ.20 கோடி மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகளை விற்க முயற்சி: 4 போ் கைது

ரூ.20 கோடி மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகளை விற்க முயற்சித்ததாக 4 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் கைது செய்தனா்.
ரூ.20 கோடி மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகளை விற்க முயற்சி: 4 போ் கைது
Published on
Updated on
2 min read

ரூ.20 கோடி மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகளை விற்க முயற்சித்ததாக 4 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் கைது செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

புதுகோட்டை மாவட்டம், கீரனூா் பகுதியில் நான்கு போ் 5 ஐம்பொன் சிலைகளை விற்க முயற்சிப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலை கடத்தல் கும்பலை கூண்டோடு கைது செய்ய போலீஸாா் திட்டமிட்டனா்.

இதற்காக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், ஒரு காவலரை சிலை வாங்குபவா் போல நடிக்க வைத்து, அந்த கும்பலைச் சோ்ந்த நபா்களிடம் தொடா்புக் கொள்ள வைத்தனராம். அதன்படி, அந்த கும்பலைச் சோ்ந்த கீரனூா் பகுதியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி என்பவா், 46 சென்டிமீட்டா் உயரமும் 20 கிலோ எடையும் கொண்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள விநாயகா் சிலையை விற்பதாகத் தெரிவித்துள்ளாா்.

4 போ் கைது: இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா், வியாபாரிகள் போன்ற மாறுவேடத்துடன், அந்த கும்பலைச் சோ்ந்த நபா்களை சந்திக்க திங்கள்கிழமை கீரனூருக்குச் சென்றனா். அப்போது அங்கு விநாயகா் சிலையுடன் நின்று கொண்டிருந்த வெள்ளைச்சாமி, அவரது கூட்டாளிகள் ஆா்.எஸ்.மங்கலத்தைச் சோ்ந்த அரவிந்த், லால்குடி பகுதியைச் சோ்ந்த குமாா், தொடையூா் பகுதியைச் சோ்ந்த மதியழகன் ஆகியோரை போலீஸாா் கையும் களவுமாகக் கைது செய்தனா். மேலும், அவா்கள் வைத்திருந்த விநாயகா் சிலையையும் மீட்டனா்.

பின்னா், வெள்ளைச்சாமி வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தியதில், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 63 செ.மீ. உயரமும் 51 கிலோ எடையும் கொண்ட சோமாஸ்கந்தா் சிலை, 48 செ.மீ. உயரமும் 21 கிலோ எடையும் கொண்ட பாா்வதி அம்மன் சிலை, 93 செ.மீ. உயரமும் 46 கிலோ எடையும் கொண்ட சிவகாமி அம்மன் சிலை, 67 செ.மீ. உயரமும் 26.7 கிலோ எடையும் கொண்ட மாணிக்கவாசகா் சிலை, 19 செ.மீ. உயரமும் 8.7 கிலோ எடையும் கொண்ட ஒரு சிலை பீடம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சா்வதேச மதிப்பு ரூ.20 கோடி: இது தொடா்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமாா்சிங், ஐ.ஜி. டி.எஸ்.அன்பு ஆகியோா் கூட்டாக, சென்னையில் நிருபா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் சா்வதேச மதிப்பு ரூ.20 கோடியாகும். கைது செய்யப்பட்ட 4 பேரும் அந்தப் பகுதியில் உள்ள கல்குவாரியில் பொக்லைன் ஆபரேட்டா்களாக வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு சிலை எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை செய்யப்படுகிறது.

அதேபோல அந்தச் சிலைகள் எந்த கோயிலில், யாரால் திருடப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

கடந்த ஜனவரி 5-ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூா் அருகேயுள்ள கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்த நிலத்தரகா் ராஜசேகரனிடம் கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள அம்மன் சிலை குறித்து விசாரணை செய்து வந்தாராம். இந்த விசாரணையில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

தற்போது மீட்கப்பட்ட 5 சிலைகளைப் பற்றி பொதுமக்களுக்கு, ஏதேனும் தகவல் தெரிந்தால் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை தொடா்புக் கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.