
2020-ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு வரலாற்றில் எக்காலத்திலும் இதுவரையில்லாத அளவிற்கு தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டை மீட்டெடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, விருதுகளும் பரிசுப் பாராட்டுச் சான்றுகளும், நலத்திட்டங்களும் வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.
அதேபோல முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழறிஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தேவநேயப் பாவாணர் விருது, அருள்நிறை காரைக்கால் அம்மையார் விருது, வீரமாமுனிவர் விருது, சி.பா. ஆதித்தனார் நாளிதழ், வாரஇதழ், திங்களிதழ் விருது எனப் புதிய ஏழு விருதுகளை அறிவித்துள்ளார்.
அவ்விருதுகளுடன் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளன. அதன்படி விழாவும், விருதுகள் வழங்குதலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டு (2020) சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம், விண்ணப்பத்திற்கான வரையறைகள் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள், தன்விவரக் குறிப்புகளுடன் நிழற்படம்(2) எழுதிய நூல்கள் விவரத்துடன் அந்நூல்களில் ஒருபடி வீதம் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு 29.02.2020 ஆம் நாளுக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
1. தமிழ்த்தாய் விருது
(சிறந்த தமிழ் அமைப்புக்கானது)
2. கபிலர் விருது
(மரபுச் செய்யுள் / கவிதைப் படைப்புகளை புனைந்து வழங்குபவருக்கு)
3. உ.வே.சா.விருது
(கல்வெட்டுகள், அகழாய்வு, ஓலைச்சுவடிகள் பதிப்பு ஆகியவற்றை மேற்கொள்பவருக்கு)
4. கம்பர் விருது
(கம்பரைப் பற்றித் திறனாய்வு செய்வோருக்கு)
5. சொல்லின் செல்வர் விருது
(சிறந்த இலக்கியப் பேச்சாளருக்கு)
6. உமறுப்புலவர் விருது
(தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவருபவருக்கு)
7. ஜி.யு.போப் விருது
(தமிழ் இலக்கியங்களை, அயலக மொழிகளில் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளருக்கு)
8. இளங்கோவடிகள் விருது
(இளங்கோவடிகளின் நடையையொட்டி, புதிய காப்பியம் படைப்பவருக்கோ / சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புபவருக்கோ)
9. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது
(சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவருக்கு)
10. அம்மா இலக்கிய விருது
(மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றிவரும் பெண் படைப்பாளருக்கு)
11. சிங்காரவேலர் விருது
(தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களில், சமுதாய முன்னேற்றத்திற்காகவும் சமத்துவக் கொள்கைக்காகவும் தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவருக்கு)
12. மறைமலையடிகளார் விருது
(தனித் தமிழில் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளருக்கு)
13. அயோத்திதாசப் பண்டிதர் விருது
(சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் ஆகியவற்றில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவருக்கு)
14. அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது
(சமரச நெறிகளால் ஆன்மீகத் தொண்டாற்றுபவருக்கு)
15. காரைக்கால் அம்மையார் விருது
(காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றி வரும் மகளிர் ஒருவருக்கு)
16. சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (10 பேருக்கு)
(பிற மொழிப் படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்பவருக்கு)
17. தமிழ்ச்செம்மல் விருது
(தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைபடுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் வழங்கப்படும்)
18. மதுரை, உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் – 3
(இலக்கிய விருது, இலக்கண விருது, மொழியியல் விருது)
((www.ulagatamilsangam.org என்ற வலைதள முகவரியில் காண்க)
அனுப்ப வேண்டிய முகவரி
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர்,
சென்னை-600 008.
தொ.பே.எண். 044 - 28190412 / 044 - 28190413
மின்னஞ்சல் முகவரி: tamilvalarchithurai@gmail.com
வலைதள முகவரி : www.tamilvalarchithurai.com என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...