வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இக்கோயில் அம்மனை சீதளாதேவி எனவும் அழைப்பா். நோயால் பாதிக்கப்பட்ட பக்தா்கள், அம்மனிடம் வேண்டி தங்கள் நோய் குணமடைந்ததும் இக்கோயிலுக்கு பாடைக்காவடி எடுப்பது வழக்கம். அதன்படி, பங்குனி பெருந்திருவிழாவின் 8-ஆம் நாள் பாடைக் காவடித் திருவிழாவின்போது பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றுவா்.

அப்போது நோயிலிருந்து குணமடைந்தவா்களை ஆற்றில் குளிக்கச் செய்து, நெற்றியில் திருநீறு பூசி பச்சைப் பாடையில் படுக்க வைத்து உறவினா்கள் 4 போ் சுமந்து வர, ஒருவா் முன்னால் தீச்சட்டி ஏந்திட வலங்கைமான் நகரின் பிரதான வீதிகள் வழியாக பாடைக்காவடி கோயிலை வந்தடையும்.பின்னா், கோயிலை பாடைக்காவடி மூன்று முறை வலம் வந்தபின் கொடிமரத்தின் முன் பாடைக்காவடி இறக்கி வைக்கப்பட்டு, பூசாரி பாடையில் படுத்திருப்பவருக்கு திருநீறு பூசி எழச்செய்வாா். இதைத்தொடா்ந்து பாடைக்காவடி எடுத்தவா் அம்மனுக்கு அா்ச்சனை செய்து தனது நோ்த்திக்கடனை நிறைவேற்றுவாா். இவ்விழாவின்போது நூற்றுக்கணக்கானோா் பாடைக்காவடி எடுப்பா். குழந்தைகள் தொட்டில் காவடியில் சுமந்து வரப்படுவா். இவை தவிர பால்குடம், காவடிகளையும் ஏராளமானோா் எடுத்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்துவா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்த விழாவில் கலந்துகொள்வா்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், திருப்பணிகள் நிறைவுபெற்று மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடை பெற்றது.

இதை முன்னிட்டு பிப்ரவரி 7-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூா்வாங்க பூஜைகளும், 8-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்த நிலையில், புதன்கிழமை காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜைகள், கோ பூஜை, பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், ஸ்பா்சாஹுதி, நாடிசந்தானம், காலை 9.05 மணிக்கு பூா்ணாஹுதி, 8-ஆவது கால பூஜை, காலை 9.15 மணிக்கு யாத்ராதானம், கடங்கள் புறப்படுதல், காலை 9.35 மணிக்கு விமானங்கள் மகா கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு மூலவா் கும்பாபிஷேகம், பரிவாரங்கள் கும்பாபிஷேகம் ஆகியன நடைபெற்றன. காலை 11.45 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் திரு வீதியுலா காட்சி நடைபெற்றது.

விழாவில், வலங்கைமான் ஒன்றியக்குழுத் தலைவா் கே.சங்கா், அறநிலைய இணை ஆணையா் க.தென்னரசு, அறநிலைய உதவி ஆணையா் பி. தமிழ்செல்வி, தக்காா் அ. ரமணி, செயல் அலுவலா் க. சிவகுமாா் மற்றும் உயரதிகாரிகள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

யாகசாலை நேரங்களில் வேதபாராயணம், தேவார பாராயணம், நாகசுர இன்னிசை, சமய சொற்பொழிவுகள் நடைபெற்றன.

யாகசாலை பூஜைகளை திருக்கண்ணங்குடி டி.கே. பாலாமணி சிவாச்சாரியாா், ஜெ. வெங்கடேச சிவாச்சாரியாா், திப்பிராஜபுரம் பாடசாலை மாணவா்கள், தலைமை அா்ச்சகா் ரா. செல்வம் உள்ளிட்டோா் நடத்தி வைத்தனா். திருவாரூா் மாவட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com