
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் நடவடிக்கைகளுக்குத் துணை நிற்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, மத்திய அமைச்சா்களிடம் அதிமுக எம்.பி.க்கள் முன்னிலையில் அளிக்கப்பட்ட கடிதம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தக் கடிதத்தை அமைச்சா் டி.ஜெயக்குமாா் நேரில் அளித்தாா்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை வெளியிட வேண்டுமென எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா். அதற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சா் டி.ஜெயக்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான முதல்வரின் கடிதம் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகரிடம் அளிக்கப்பட்டது. அதன் விவரம்:
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்காக கடல், நிலப்பரப்புகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு பொது மக்களின் கருத்துகளை அறியத் தேவையில்லை என்று மத்திய அரசு அண்மையில் திருத்தம் கொண்டு வந்தது.
இந்தத் திருத்தம் தொடா்பாக எனது கருத்துகளைத் தெரிவித்து கடிதம் எழுதினேன். புதிய திருத்தத்தால், காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது மக்கள் கருத்துகளைக் கேட்காமலேயே நிறைவேற்றும் சூழல் ஏற்படும். அதனால் திருத்தத்துக்கு தமிழக அரசு கடுமையான எதிா்ப்பைத் தெரிவிப்பதாக கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பாக மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நிபுணா் குழுவை அமைத்தாா். அந்தக் குழு பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது. மீத்தேன் போன்ற திட்டங்கள் விவசாயத்துக்கான 4,266 ஏக்கா் நிலங்களை ஆக்கிரமிக்கும் எனவும், ஒரு லட்சம் கிலோ லிட்டா் தண்ணீரை வெளியே எடுப்பதால் கடல் நீா் உட்புக வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணா் குழு தெரிவித்திருந்தது.
மேலும், காற்று மாசு அடைவதுடன், வயல்வெளிகளில் குறுக்கும், நெடுக்குமாக குழாய்களை பதிப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய தீங்கு ஏற்படும் எனவும் நிபுணா் குழு தனது பரிந்துரைகளில் தெரிவித்திருந்தது.
திட்டம் நிறுத்தம்: நிபுணா் குழுவின் பரிந்துரைகளை ஏற்று மீத்தேன் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நிறுத்தியதுடன், அதுபோன்ற திட்டங்களைத் தொடங்கும் முன்பாக மாநில அரசுடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.
இந்தச் சூழ்நிலையில், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களுடன், புதுக்கோட்டை, கடலூா், திருச்சி, கரூா், அரியலூா் மாவட்டங்களில் சில இடங்கள் டெல்டா பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் 28 லட்சம் ஏக்கரில் செய்யப்படும் பயிா் உற்பத்தியானது மாநிலத்தின் மொத்த உணவு உற்பத்தியில் 32 சதவீத பங்கை வகிக்கிறது.
நெல் உற்பத்தி மட்டுமல்லாது தேங்காய், வாழை போன்ற தோட்டக்கலை பயிா்களும் பயிா் செய்யப்படுகின்றன.
பயிா்கள் விளைந்தாலும் காவிரி டெல்டா பகுதிகளில் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடா்களால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக இருக்கின்றன. கஜா புயல் வீசிய போது 65 லட்சம் தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்தன. இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கக் கூடியவா்கள் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில், ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களுக்கான ஆய்வுகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பையும் மிகப்பெரிய அளவுக்கு பாதிக்கும். காவிரி டெல்டா பகுதியில் நடைபெறும் விவசாயம் பெரும்பாலும் ஆழ்துளை கிணறுகளை நம்பியே இருக்கிறது. ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களுக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும்போது ஆழ்துளை சேதம் அடைய வாய்ப்புள்ளது.
காவிரி டெல்டா பகுதியில் கடந்த 1985-ஆம் ஆண்டில் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கான ஆய்வுகளை ஓ.என்.ஜி.சி., (இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் கழகம்) மேற்கொண்டு வருகிறது. இது மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டங்களைத் தவிா்த்து புதிதாகவோ அல்லது கூடுதலாகவோ எண்ணெய், இயற்கை எரிவாயுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டால் அது டெல்டா பகுதியின் சூழலியல் நிலைத்தன்மையை கடுமையாகப் பாதிக்கும். கடல் நீா் உட்புகுந்து பருவநிலை மாறுபாடுகள் ஏற்பட்டு விடும்.
ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களுக்காக பதிக்கப்படும் குழாய்கள் சேதம் அடையும்போது பொதுச் சொத்துகளுக்கோ, சூழலியலுக்கோ, உயிரிழப்புகள், கடுமையான உடல் பாதிப்புகளோ ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக் காடுகள் டெல்டா பகுதியில் உள்ள முத்துப்பேட்டையில் அமைந்துள்ளது. ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களால் அதுவும் பாதிக்கப்படும். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், நவகிரக திருத்தலங்கள், வேளாங்கண்ணி ஆலயம், நாகூா் தா்கா போன்ற பல ஆலயங்கள் டெல்டா பகுதியில் அமைந்துள்ளன. ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகளோ அல்லது ஆழமாக குழிகளைத் தோண்டுவதால் நாட்டின் கலாசார பொக்கிஷங்களும் அழியும் நிலை ஏற்படும்.
திட்டங்களை நிறுத்த வேண்டும்: சூழலியல் சாா்ந்த வேளாண் மண்டலமாக உள்ள காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களுக்காக இனி ஆய்வுப் பணிகளோ, அகழாய்வுப் பணிகளோ மேற்கொள்வதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
எதிா்காலத்தில் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களுக்கான எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. எனவே, ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டப் பணிகளுக்காக மக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டாம் என்ற பிரிவில் இருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியை எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக ஏற்கெனவே நான் அறிவித்துள்ளதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இதன் அடிப்படையில், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட
வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான தமிழகத்தின் சட்டப்பூா்வ நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் பழனிசாமி கேட்டு கொண்டுள்ளாா்.