சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமையுமா? மத்திய சட்ட அமைச்சர் விளக்கம்

சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ அனுப்பிய கடிதத்துக்கு மத்திய சட்ட அமைச்சர் பதில் அனுப்பியுள்ளார்.
சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமையுமா? மத்திய சட்ட அமைச்சர் விளக்கம்


சென்னை: சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ அனுப்பிய கடிதத்துக்கு மத்திய சட்ட அமைச்சர் பதில் அனுப்பியுள்ளார்.

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற மாநிலங்களவையின் விவாத நேரத்தின் போது உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தீர்கள். 

அது குறித்து சில விளக்கங்களை தெரிவிக்க விரும்புகிறேன். 

அரசு அமைப்புச் சட்டத்தின் 130வது பிரிவின்படி, உச்ச நீதிமன்ற அமர்வு தில்லியில் நடைபெறலாம். அல்லது காலத்துக்கு ஏற்ற வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீர்மானிக்கின்ற, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் வேறு இடங்களிலும் நடைபெறலாம்.

கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து உச்ச நீதிமன்றக் கிளையை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவிட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சட்ட ஆணையத்தின் 229 ஆவது அறிக்கையின்படி, உச்ச நீதிமன்றத்தின் சுற்று அமர்வுகள், வடபகுதிகளுக்காக தில்லியிலும், தெற்குப் பகுதிக்கு சென்னை, ஹைதராபாத், கிழக்கில் கொல்கத்தா, மேற்கில் மும்பை ஆகிய இடங்களிலும் நடத்தலாம் என பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் அதற்கு உச்ச நீதிமன்றம் இசைவு அளிக்கவில்லை, பல்வேறு காலக்கட்டங்களில் மத்திய அரசு வழக்குரைஞர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டபோதும் அவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.

36/2016 ரிட் மனு, தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைக்க நீதிப் பேராணை கோரிய வழக்கில் 13.07.2016 அன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, இந்தப் பிரச்னையை அரசு அமைப்புச் சட்ட அமர்வின் விசாரணைக்குப் பரிந்துரை செய்து இருக்கின்றது. அந்த வழக்கு, தற்போது, உச்ச நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com