
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று அவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.
பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேரவையில் அவைத் தலைவர் தனபால் இதனை அறிவித்தார்.
கேரளா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழக சட்டப்பேரவையிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு, எழுத்துப்பூர்வமாக ஸ்டாலினுக்கு பதில் தந்து விட்டதாக தமிழக சட்டப்பேரவையில் அவைத் தலைவர் தனபால் தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு விவகாரம் குறித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று விதி உள்ளது என்று அவைத் தலைவர் தனபால் கூறினார்.
அதற்கு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து விவாதம் நடத்தப்படாமலேயே, அதுபற்றி தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று கூறுவது ஏன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தனபால், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு விவகாரம் குறித்து பேரவையில் விவாதம் நடத்தப்படாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.
வண்ணாரப்பேட்டையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்திய சம்பவம் பற்றி மட்டுமே பேரவையில் பேசலாம் என்றும் தனபால் தெரிவித்தார்.