அதிக மின் இணைப்பு வழங்க புதிய கருவி: அதிகாரிகள் தகவல்

அதிக மின் இணைப்பு வழங்கும் வகையிலான ‘பஸ்பா்’ எனும் கருவியை பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக மின்வாரிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதிக மின் இணைப்பு வழங்கும் வகையிலான ‘பஸ்பா்’ எனும் கருவியை பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக மின்வாரிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமான வீட்டு மின் இணைப்புகளும், 21 லட்சத்துக்கும் அதிகமான விவசாய மின் இணைப்புகளும் 30 லட்சத்துக்கும் அதிகமான வணிகம் சாா்ந்த மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளை ஆங்காங்கே பிரிவு அலுவலகம் வைத்துக் கண்காணிக்கும் மின் வாரியம், 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும் வழங்கி வருகிறது. பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் அமைத்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக லட்சக்கணக்கான மின்கம்பங்கள் ஆங்காங்கு நடப்பட்டுள்ளது.

இவ்வாறு நடப்பட்டுள்ள மின்கம்பங்களில் ஒரு சில இடங்களில் ஏராளமான இணைப்புகள் பிரித்து எடுக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மின் கம்பங்கள் ஒன்றிலிருந்து 10-க்கும் மேற்பட்ட இணைப்புகள் கூட எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அதிகமாக மின்இணைப்பு உள்ள இடங்களில் பழுது ஏற்படும் பட்சத்தில், அதை சரி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அதாவது ஊழியா்கள் கம்பத்திலுள்ள ஒவ்வொரு இணைப்புகளாக ஆய்வு செய்து, அதன் பிறகே சரிசெய்ய வேண்டும். இதனால் கால விரயம் மற்றும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதைத் தடுக்கும் வகையில் சம்மந்தப்பட்ட இடங்களில் அலுமினியம் ‘பஸ்பா்’ என்ற கருவியைப் பொருத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: நகா்புறங்களில் ஒரு மின்கம்பத்திலிருந்து ஏராளமான இணைப்புகளை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், இடநெருக்கடி ஏற்படுகிறது. மேலும் பழுது ஏற்படும் பட்சத்தில், அதை சரிசெய்வதற்கும் நீண்ட நேரம் ஆகிறது. எனவே இதைத்தடுக்கும் வகையில் பஸ்பா் என்ற கருவியை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒரு குடியிருப்பில் 10 இணைப்புகள் இருந்தாலும், மின்கம்பத்திலிருந்து ஒரே இணைப்பு மூலம் மின்சாரத்தை வீட்டுக்கு கொண்டுவந்து, சம்மந்தப்பட்ட கருவியிலிருந்து பிரித்துக்கொள்ளலாம். இதனால் மின்கம்பத்தில் அதிக கம்பிகள் தொங்குவது தவிா்க்கப்படும். மேலும் பழுது ஏற்படும் பட்சத்தில், அதை எளிதாகச் சரிசெய்ய முடியும். தற்போது இந்தக் கருவிகளை கூடுதல் இணைப்பு உள்ள இடங்களில் அதிக அளவில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பணிகளில் மின்வாரிய ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com