விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணி: தூத்துக்குடி அருகே வலுக்கும் எதிர்ப்பு

தூத்துக்குடி அருகே சில கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணி: தூத்துக்குடி அருகே வலுக்கும் எதிர்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சில கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் சென்னை எண்ணூர் - திருவள்ளூர்- பெங்களூரு- புதுச்சேரி- நாகப்பட்டினம்- மதுரை- தூத்துக்குடி வரையிலான எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில்,ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை (ஆர்டிபிஎல் பிரிவு) எரிவாயு குழாய் பதிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அலுவலகம் அனுமதி வழங்கியது.
 ராமநாதபுரத்தில் உள்ள மறவன்கரிசல்குலம் என்ற பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி எரிவாயு சேமிப்பு நிலையத்தில் இருந்து இயற்கை எரிவாயு மற்றும் மறு சுழற்சி திரவ இயற்கை எரிவாயுவை (ஆர்எல்என்ஜி) குழாய்கள் மூலம் எடுத்துச் சென்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட், தாரங்கதாரா கெமிக்கல் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு விநியோகம் செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
 இந்தத் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான வழித் தடங்களில் பல்வேறு விவசாய நிலங்கள், நீரோடைகள், உப்பளங்கள், மானாவாரி விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். விவசாய நிலங்களை பாதிக்காமல் மாற்று வழியில் எரிவாயு குழாய் பதிக்க தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 மேலும், விவசாயிகளின் நிலத்துக்கான சேதங்கள், பயிர் சேதம் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்காத நிலையில், இந்தத் திட்டத்தின் இடைக்காலங்களில் ஏற்படும் விபத்துகளின் மூலம் மேலும் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கிற அச்ச உணர்வு பொதுமக்களிடையே நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவûலை தெரிவித்தனர்.
 விவசாயிகள் எதிர்ப்பு; அதிகாரிகள் முனைப்பு: இதுகுறித்து சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவம் கூறியது: விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படும் எரிவாயு குழாய் பதிப்பின் மூலம் மானாவாரி, ஏரிப்பாசனம் மற்றும் கிணற்று பாசன பகுதிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் வேம்பார், குலையன்கரிசல், முள்ளக்காடு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல முறை மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 இந்தத் திட்டத்தை முடிப்பது தொடர்பாக இரண்டு முறை கால நீட்டிப்பு செய்துள்ளதால் தற்போது மார்ச் 31-ஆம் தேதிக்குள் திட்டத்தை முடிக்காவிட்டால் எரிவாயு நிறுவனத்துக்கும், அரசுக்கும் இடையே பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளது. அதனால், விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே அதிகாரிகள் குறியாக உள்ளனர். மாற்றுப்பாதையை கருத்தில் கொண்டால் அதற்கான அனுமதி பெறவே இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்பதால் அதிகாரிகள் பணியை விரைவு செய்ய முயற்சி செய்து வருகின்றனர் என்றார் அவர்.
 இழப்பீட்டில் அநீதி: விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் குலையன்கரிசல் பகுதி விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ஆஸ்கர் கூறியது: குலையன்கரிசல், முள்ளக்காடு, பொட்டல்காடு பகுதிகளில் பொதுமக்களும், விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டாலும் அதை கண்டுகொள்ளாத எரிவாயு நிறுவன அதிகாரிகள் விவசாய நிலப்பரப்பினை பாதிக்கும் விதமாக குழாய்களை பதிக்க முற்பட்டனர். இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. விவசாயிகளின் எதிர்ப்பால் தற்போது அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
 இந்தப் பிரச்னை தொடர்பாக வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்தவித உடன்பாடும் இதுவரை ஏற்படவில்லை. மொத்தமுள்ள 108 புல எண் பகுதிகளை கொண்ட இடத்தில் 40 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் நிலத்தை வழங்க மறுத்தும், நிலங்களுக்கு சந்தை விலை கேட்டும் வருகின்றனர்.
 பிப்.22-இல் உண்ணாவிரதம்: மேலும், விவசாயிகளிடம் அனுமதி பெற்ற பிறகே குழாய்களை பதிக்க வேண்டும் என நீதிமன்ற ஆணை உள்ள நிலையில், அதை எரிவாயு நிறுவனம் மீறி செயல்படுகிறது. அருகில் அரசு நிலம் உள்ள போதிலும் அந்த வழியாக எரிவாயு குழாயை கொண்டு செல்ல எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி பிப்ரவரி 22-ஆம் தேதி முத்தையாபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
 97% பணிகள் நிறைவு: இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியது: நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்கிய பகுதிகளில் மட்டுமே குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 97 சதவீத பணிகள் முடிந்துவிட்டதால் மாற்றுப்பாதை வழியாக கொண்டு செல்ல முயன்றால் தொழில்நுட்ப பிரச்னை ஏற்படும். மேலும், அதில் பாதுகாப்பு பிரச்னையும் உள்ளது. இந்தத் திட்டம் நிறைவேறினால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இதுவரை நிலம் வழங்காதவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
 தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல், பொட்டல்காடு, முள்ளக்காடு பகுதி விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், எரிவாயு நிறுவனமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 - தி. இன்பராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com