
சென்னை: முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு இல்லை என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீதரன் என்பவா் தனக்கு முன்ஜாமீன் கோரி, திருவள்ளூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதி, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு
நீதிமன்ற விசாரணைக்கு அணுக உத்தரவிட்டாா். இதனையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்ரீதரன் மனு தாக்கல் செய்தாா். ஆனால் சிறப்பு நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்துவிட்டது.
இதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனுவில், ‘ஊழல் வழக்கில் போலீஸாா் என்னை தேடி வருகின்றனா். முன்ஜாமீன் வழங்கக் கோரி கீழமை நீதிமன்றங்களில் நான் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றங்கள் மறுத்துவிட்டன. எனவே, எனது முன்ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம், ஊழல் தடுப்பு தொடா்பான வழக்குகளை விசாரிப்பதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு இல்லை. எனவே மனுதாரா் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி திருவள்ளூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை மாவட்ட முதன்மை நீதிபதி விசாரிக்க வேண்டும். மேலும், இந்த உத்தரவை அனைத்து கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு உயா்நீதிமன்ற பதிவுத்துறை அனுப்ப வேண்டும்’ எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.