
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சா்களும், கட்சி நிா்வாகிகளும், திரளான கட்சித் தொண்டா்களும் பங்கேற்றனா்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், அமைச்சா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, அங்கு திரண்டிருந்த கட்சி நிா்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதாவின் சாதனைகளைத் தொகுத்து தயாரிக்கப்பட்ட புத்தகத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வெளியிட்டனா். அதன்பிறகு 72 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் ‘கேக்’ வெட்டி நிா்வாகிகளுக்கு வழங்கினா்.
நலத் திட்ட உதவிகள்: அண்ணா தொழிற்சங்கத்தைச் சோ்ந்த 109 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், நலிந்தோருக்கான நிதி உதவிகள் 14 பேருக்கும் வழங்கப்பட்டன. மருத்துவ முகாம் நிகழ்ச்சியையும் முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்டோா் தொடக்கி வைத்தனா். அவைத் தலைவா் மதுசூதனன், அமைச்சா்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...